ஆசை மனைவி அள்ளி அள்ளி தந்ததும் அளவில்லாமல் அன்னத்தை அசைபோட்ட கணவனுக்கு தான் சாகும் வரை, அது பாசம் அல்ல... அது உயிரை கொல்லும் ஸ்லோ பாய்சன் என்பது தெரியாமலேயே போய்விட்டது. கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், பிரதிமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பாலகிருஷ்ணாவுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 20-ம் தேதி பாலகிருஷ்ணா வீட்டில் படுக்கையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரதிமாவின் அண்ணன் சந்தீப்பிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. கணவர் நோயால் அவதிப்பட்டதால் அவர் படும் வேதனையை பார்க்க முடியாமல், முகத்தை தலையணையால் அழுத்தி கொன்றதாக கூறி அண்ணனை அதிர வைத்தார் பிரதிமா.தங்கை கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த சந்தீப், போலீசுக்கு தகவல் தந்துள்ளார். இதையடுத்து அஜேகர் போலீசார், பிரதிமாவை கைது செய்து விசாரித்த போது பல பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பாலகிருஷ்ணாவின் வருமானம் ஆடம்பர செலவுகளுக்கு போதவில்லை என்பதால், சொந்த ஊரிலேயே பியூட்டி பார்லர் ஆரம்பித்துள்ளார் பிரதிமா. பிசினசை டெவலெப் செய்ய, தான் செய்த மேக்கப்-களை இன்ஸ்டாவில் பதிவிட்டு விளம்பரம் செய்ததால், அதன் மூலம் இன்ஸ்டாவில் பிரபலமானார் பிரதிமா. இந்த நிலையில், இன்ஸ்டா மூலம் அறிமுகமான திலீப் ஹெக்டே என்ற இளைஞருடன் பிரதிமாவுக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக பரிணமித்திருக்கிறது. இதை எப்படியோ அறிந்து கொண்ட பாலகிருஷ்ணா, தனது மனைவி பிரதிமாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொல்ல ஆண் நண்பர் திலீப் உடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார் பிரதிமா. அதன்படி, ஆண் நண்பர் திலீப் வாங்கி கொடுத்த ரத்தப் புற்றுநோய்க்கு வழங்கப்படும் ஆர்சனிக் ட்ரையாக்சைடு என்ற கீமோதெரபி மருந்தை, கணவன் பாலகிருஷ்ணாவுக்கு பிரதிமா உணவில் கலந்து ஊட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பாலகிருஷ்ணாவுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்ததாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணா எப்போது இறப்பார் என காத்திருந்த பிரதிமா, பொறுமையை இழந்து கணவனை தலையணையை கொண்டு முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார். பிரதிமாவின் வாக்குமூலம், குடும்பத்தாரை அதிர வைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தங்கை என தெரிந்தும் அதை மறைக்காமல் போலீசில் புகார் தெரிவித்த சந்தீப்பை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.