மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கரட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். செங்கல் சூளையில் லோடுமேன் வேலை பார்த்து வந்த இவருக்கும், ஜோதிகா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட வலசை பகுதியை சேர்ந்த உடப்பன் என்பவர், சரவணன் வசிக்கும் தெருவில் பேவர் பிளாக் பதித்து கொண்டிருந்தார். அப்போது ஜோதிகாவிடம் குடிக்க தண்ணீர் தருமாறு பேச்சு கொடுத்த உடப்பன், நைசாக பேசி செல்போன் எண்ணையும் வாங்கி தினமும் பேச ஆரம்பித்துள்ளார்.இந்த பேச்சு ஒருகட்டத்தில் தகாத உறவில் முடிந்த நிலையில், தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு உடப்பனுடனேயே சென்றுவிட்டார் ஜோதிகா. 3 மாதங்களுக்கு மேலாக உடப்பனுடன் வாழ்ந்த ஜோதிகாவை, பிள்ளைகளுக்காக கணவருடன் சேர்ந்து வாழுமாறு உறவினர்கள் கட்டாயப்படுத்தி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் சரவணனுடன் சேர்த்து வைத்துள்ளனர். ஜோதிகா வீட்டுக்கு வந்ததில் இருந்தே, பிள்ளைகளை விட்டுவிட்டு போனவள்தானே நீ என சரவணன் திட்டிக்கொண்டே இருந்ததாகவும், என்றைக்கு இருந்தாலும் உடப்பனுக்கு என் கையால்தான் சாவு எனவும் கூறியதாக தெரிகிறது. இதனை உடப்பன் காதில் போட்டு வைத்த ஜோதிகா, சரவணனை தீர்த்துக்கட்டினால் எந்தவித இடையூறும் இல்லாமல் நாம் சேர்ந்து வாழலாம் என உசுப்பேத்தி விட்டதோடு ஸ்கெட்சும் போட்டு கொடுத்துள்ளார். அதன்படி, அதிகாலை கணவர் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் உடப்பனை செல்போனில் அழைத்த ஜோதிகா, சைலண்ட்டாக காரியத்தை முடித்துவிட்டுப்போ என சிக்னல் கொடுத்துள்ளார். இதையடுத்து சப்போர்ட்டுக்கு தனது நண்பருடன் வந்த உடப்பன், தூங்கி கொண்டிருந்த சரவணனின் கழுத்தில் ஓங்கி மிதிக்க, உடன் சேர்ந்து ஜோதிகாவும் தாக்கி உள்ளார். 3 பேரும் தாக்கியதில் நிலைகுலைந்த சரவணனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர்.விடிந்தும் விடியாமலும் கொலை செய்த கையோடு, சரவணனின் சடலத்தை அங்கு கட்டியும் கட்டாமலும் கிடந்த ஒரு வீட்டுக்குள் போட்டுவிட்டு 3 பேருமே எஸ்கேப் ஆகினர். காலையில் சரவணன் கிடந்த கோலத்தை கண்டு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, சிலமணிநேரங்களில் உடப்பனையும், ஜோதிகாவையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான உடப்பனின் நண்பரையும் தேடி வருகின்றனர்.