தாலி தொடர்பான தனது கணவர் தெரிவித்திருந்த கருத்துக்கு, சமூக வலைதளங்களில் அத்துமீறி ஆபாச மிரட்டல் விடுப்பதாக பாடகி சின்மயி அளித்த புகாரில் ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேர்காணல் ஒன்றில் பேசிய சின்மயி- இன் கணவர் ராகுல் ரவீந்திரன் திருமணத்திற்கு பிறகு தாலி அணிவதும், அணியாததும் தனது மனைவியின் விருப்பம், அது அவர் உரிமையை சார்ந்தது என கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பிற்போக்காளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அதற்கு சின்மயி தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்தார். அதில் ஒருவர் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து இழிவாக ட்ரோல் செய்ய இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் நீண்டது. ஒரு கட்டத்தில் மிரட்டல் விடுப்பது போல் டிரோல் செய்யப்பட்டதால் சின்மயி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.