தொடர் விடுமுறையை பயன்படுத்தி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தனியார் விடுதிகள், லாட்ஜ், தங்கும் ஓட்டல்களில், சிண்டிகேட் அமைத்து ரூம் ஃபுல் ஆகிவிட்டது என, டிமாண்ட் ஏற்றி கட்டாய கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.ராமேஸ்வரம் சென்று வந்தால், புண்ணியத்தோடு வருவோமோ இல்லையோ நிச்சயம் காலி பர்சோட தான் வருவோம் எனச் சொல்லும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் கட்டணக் கொள்ளை தலைவிரித்தாடுவதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயில், காசிக்கு நிகரான புனிதத் தலமாகவும், பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்குவதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, அக்னி தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.அரையாண்டு விடுமுறை, சபரிமலை சீசன், ஓம்சக்தி கோயில் சீசன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு ராமேஸ்வரத்தை சேர்ந்த தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவக உரிமையாளர்கள் என பலரும் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.தங்கும் விடுதிகளை பொருத்தவரையில், உரிமையாளர்கள் அனைவரும் சிண்டிகேட் போல செயல்பட்டு, பக்தர்கள் எங்கு தங்கவேண்டும், எந்த கட்டணத்தை தரவேண்டும் என மறைமுகமாக நிர்ணயம் செய்து, மோசடியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தனியார் விடுதி, லாட்ஜ், தங்கும் ஓட்டல்களில் சிண்டிகேட் அமைத்து, இணையதளத்தில் மொத்த ரூம்களை லாக் செய்துவிட்டு நேரில் வரும் பக்தர்களிடம் ரூம் ஃபுல் என டிமாண்ட் ஏற்படுத்துவது வாடிக்கையாக மாறிவிட்டது.மேலும், அறைகளின் தங்கும் வாடகையை பன்மடங்கு உயர்த்தி புக் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. அதுவும் இப்போது சீசன் நேரம் என்பதால் 5 ஆயிரம், 10 ஆயிரம் என இருந்த விடுதி அறைகளின் வாடகை ஒரே அடியாக 40 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, பக்தர்களை கடும் இன்னலுக்கு ஆழ்த்தியுள்ளனர். பெரும் லாப நோக்கத்திற்காக, வழக்கமான 24 மணிநேர வாடகை நேரம் 12 மணிநேரமாக குறைக்கப்பட்டது. இதனால் குடும்பமாக வரும் சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் வேறு வழியில்லாமல் கூடுதல் பணத்தை செலவிட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை அரசும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது தான் வேதனையிலும் வேதனை.தனியார் விடுதி மட்டுமல்ல, ஆட்டோ, வாடகை வேன் என அனைத்து வாடகையுமே உச்சத்தை தொட்டிருக்கின்றன. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் சாமியை பார்க்க முடியாமல் இரவு தங்கி காலையில் தரிசனம் மேற்கொள்ளலாம் என்ற முடிவெடுத்தாலும், தங்குவதற்கு விடுதி கிடைக்காமலும், கிடைத்த விடுதிக்கு கட்டணமாக கையில் இருக்கும் மொத்தப் பணத்தையும் கொடுத்துவிட்டுப் போகும் நிலையில் தான், ராமேஸ்வரம் உள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதுதவிர ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளுள் ஒன்றாக போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது. பாதைகளை முறைப்படுத்தாமல் போக்குவரத்து போலீசாரும் அலட்சியம் காட்டுவதாக புகார் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கழிப்பிட வசதி இல்லாததால் பெண்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வருமானம் அதிகளவில் கிடைக்கும் நிலையில், அதை வழங்கும் பக்தர்களுக்கு எவ்வித வசதியையும் அறநிலையத்துறையும், அரசு நிர்வாகமும் ஏற்படுத்தி தராதது மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் புபேஸ்...