திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்றுவிட்டு, சென்னைக்கு திரும்பிய போது, முன்பக்க டயர் வெடித்து அருகே உள்ள விவசாய கிணற்றுக்குள் கார் விழுந்ததில் வழக்கறிஞர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 மணிநேர தேடுதலுக்குப்பின் 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் விவசாய கிணற்றில் தடுப்புச்சுவர் உயரமாக இல்லை எனவும் அதனை நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.கட்டுப்பாட்டை இழந்த கார்...அண்ணாமலையாரை தரிசனம் செய்து நெற்றியில் வைத்த திருநீறு அழியும் முன்பே இப்படி ஒரு விபத்தில் சிக்கி இந்த 4 பேரும் உயிரிழப்பார்கள் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் வினோத். இவர் தனது நண்பர்களான ராஜா, சேகர், ஜெயவேல் ஆகியோருடன் காரில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்றார். பௌர்ணமி தின கிரிவலத்தில் கலந்துகொண்ட இவர்கள் தரிசனம் முடிந்து மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி பகுதியில், புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காலை 8.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் நான்கைந்து முறை பல்டியடித்து சாலையோரம் இருந்த விவசாய கிணற்றிற்குள் விழுந்தது. கார் சக்கரத்தின் wheel cap ஒருபக்கம் கழன்று விழ, நம்பர் பிளேட் மறுபக்கம் சிதறி ஓட, இந்த விபத்தை கண்டு பதற்றமடைந்த பொதுமக்கள் சிலர் சத்தியமங்கலம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் போன் செய்து தகவல் கூறி உள்ளனர்.சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி...அடுத்த அரைமணி நேரத்தில், தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் வர, 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் கிரேன் வரவழைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கிணற்றில் மூழ்கி இருந்த காரை தீயணைப்புத் துறையினர் மேலே கொண்டு வந்தனர். அப்பளம்போல் நொறுங்கி இருந்த காரின் முன்பக்கத்தில் சீட் பெல்ட் அணிந்திருந்தபடி ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் பின்சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் உயிரிழந்தனர். ஆனால், டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த நபர் காருக்குள் இல்லை. அதனால், கார் ஓட்டியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சிலநிமிடங்களில் அவரது சடலமும் மீட்கப்பட்டது. இதனிடையே, கார் எண்ணை வைத்து ஒருபுறம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த காரின் wheel cap கழன்று கிடந்த இடத்தின் அருகே வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் கேஸ்கட்டு (CASE BUNDLE) ஒன்று கிடந்துள்ளது. அந்த கேஸ்கட்டில் வினோத் என குறிப்பிடப்பட்டு ஒரு செல்போன் எண்ணும் இருந்தது. அதனை வைத்து விசாரித்த போது தான், வழக்கறிஞர் வினோத் நண்பர்களுடன் கோவிலுக்கு சென்றதும் வரும் வழியில் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கிணறுகளின் தடுப்புச்சுவர்களை உயரப்படுத்த வேண்டும் இந்த விபத்து குறித்து பேசிய அப்பகுதி மக்கள், தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள விவசாய கிணற்றின் தடுப்புச்சுவர் குறைவான உயரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், ஒருவேளை தடுப்புச்சுவர் உயரமாக அமைக்கப்பட்டிருந்தால் கார் கிணற்றுக்குள்ள விழுந்திருக்காது எனவும் புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், விபத்து நடக்கும் பகுதி, எனவே மெதுவாக செல்லவும் என ஒரு அறிவிப்பு பலகை கூட வைக்கவில்லை எனக்கூறும் மக்கள், சாலையோரம் உள்ள விவசாய கிணறுகளின் தடுப்புச்சுவர்களை உயரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.டயர் வெடிப்பது ஏன்?இது ஒருபுறமிருந்தாலும் பைக், கார் என எந்த வாகனமாக இருந்தாலும் அதனை முறையாக பராமரிக்க வேண்டும் எனக்கூறும் மோட்டார் வாகன பராமரிப்புத்துறை அதிகாரிகள், குறைந்த காற்றழுத்தம் இருந்தால் கார் டயரின் பக்கவாட்டு பகுதி வளைந்து, அதிக வெப்பத்தை உருவாக்கி டயரை வெடிக்கச் செய்யும் எனவும் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் டயரில் அதிக காற்றழுத்தம் இருந்தாலும் வெடிக்கும் எனவும் கூறுகின்றனர். அதேபோல், நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் தொடர்ந்து நீண்ட தூரம் பயணிக்கும்போது, உராய்வு காரணமாக டயர் சூடாகி வெடிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தனர். Related Link காதல் கதைகளும் பறிபோன உயிரும்