கடலூரில், தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை, கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு போலீஸில் அக்கா சரணடைந்தார். அக்காவை கைது செய்த போலீஸார், அவரது கணவரை தேடி வரும் பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.கடலுார் மாவட்டம், பாதிரிக்குப்பம் சுந்தரமூர்த்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரசாத், புதன்கிழமை மாலை தனது வீட்டில் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் நேரில் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.அதாவது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் 21 வயது இளம்பெண் மீது பிரசாத்துக்கு ஒரு கண். அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த இளம்பெண்ணுக்கு பிரசாத், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பிரசாத்தின் தொல்லை எல்லை மீறவே, விஷயத்தை தனது அக்காவிடம் கூறியுள்ளார் அந்த இளம்பெண்.அக்கா கவிப்பிரியாவும், அவரது கணவர் முத்துவும் பிரசாத்தை அழைத்து கண்டித்துள்ளனர். இது, பிரசாத்துக்கு பயங்கர கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புதன்கிழமை மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த பிரசாத், கவிப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரசாத் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.ஆனால், ஆத்திரம் தீராத கவிப்பிரியா, வீட்டில் இருந்து கத்தியை எடுத்து கொண்டு, பிரசாத்தின் வீட்டுக்கு சென்று அவரது கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரசாத், துடிதுடித்து சிறிது நேரத்திலேயே இறந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீஸார், பிரசாத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மோப்பநாய் கூப்பர், பிரசாத் வீட்டில் இருந்து கிளம்பி பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று வந்தது.இதனிடையே, பிரசாத்தை கொலை செய்ததாக, கவிப்பிரியா திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். தொடர்ந்து, கவிப்பிரியாவை கைது செய்த போலீஸார், அவரது கணவர் முத்துவை தேடி வருகின்றனர்.