ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே சிறுமாத்தூர் பகுதியில், TN11 என்ற ஆண்களுக்கான ரெடிமேட் துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் அபிஷேக். கடையில் சங்கீதா என்ற 19 வயது இளம்பெண் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கருப்பு என்கிற சந்துரு என்பவர், அதீத கஞ்சா போதையில் இந்த துணிக்கடைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் ஒரு எக்சல் சட்டையை கேட்டுள்ளார். சட்டை எடுத்துக் கொடுக்கப்பட்ட நிலையில், அதை எடுத்துக் கொண்டு, பணம் செலுத்தாமல் வெளியே செல்ல முயன்றுள்ளார். இதனை தடுத்து நிறுத்திய பெண் ஊழியர் சங்கீதா, சட்டையை பிடுங்கியதும், ஆத்திரமடைந்த சந்துரு, பெண் ஊழியரிடம் தகாத வார்த்தைகளால் பேசத் தொடங்கி, “உன் ஓனரை வெட்டி விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் கடையிலிருந்து வெளியேறிய நிலையில், இந்த முழு சம்பவமும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கருப்பு என்கிற சந்துரு மீது, திருட்டு மற்றும் வழிப்பறி தொடர்பான வழக்குகள், மணிமங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கடந்த 2023 டிசம்பர் மாதம், இதே நபர், அதே துணிக்கடைக்குள் புகுந்து, பணம் செலுத்தாமல், ஆறு பேண்ட் மற்றும் ஆறு சட்டைகளை எடுத்துச் சென்றதாக, துணிக்கடை உரிமையாளர் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து துணிக்கடை உரிமையாளர் அபிஷேக், படப்பை காவல் நிலையத்தில், சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், புகார் அளித்து நாட்கள் கடந்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார். பகல் நேரத்தில், பெண்கள் வேலை செய்யும் கடைக்குள் புகுந்து, ஆபாச பேச்சும், கொலை மிரட்டலும் விடுக்கப்பட்ட இந்த சம்பவம், பெண்கள் பாதுகாப்பு குறித்த கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சிசிடிவி ஆதாரங்கள் இருந்தும், போலீஸ் தரப்பில் எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? என்பதே, தற்போது பொதுமக்கள் எழுப்பும் முக்கிய கேள்வியாக உள்ளது.இதையும் படியுங்கள் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மினி பேருந்து ஓட்டுநர்கள்