ராமேஸ்வரம் அருகே காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை, காய்கறி வெட்டும் கத்தியால் பின்னங்கழுத்திலேயே குத்தி படுகொலை செய்த திகில் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற மாணவியை ரத்த வெள்ளத்தில் துள்ளத் துடிக்க குத்தி கொன்ற ஒரு தலை காதல் கொடூரனின் வெறிச் செயலால் மாணவி குடும்பமே கண்ணீரில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் - கவிதா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஷாலினி 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், வகுப்பிலேயே முதல் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு நன்றாக படித்து வந்தார். ஆனாலும், பருவ கோளாறு காரணமாக மாணவி ஷாலினி அதே சேராங்கோட்டையை சேர்ந்த முனியராஜ் என்பவனுடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.படிப்பறிவு இல்லாத 22 வயதான முனியராஜ், மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில், சில நாட்கள் கூட இவர்களது பழக்க வழக்கம் நீடிக்கவில்லை என கூறப்படுகிறது. மாணவியின் நடவடிக்கையை கவனித்த தாய் கவிதா புரியும் படியாக எடுத்துச் சொல்ல, படிப்பு தான் முக்கியம் என நிதானமாக யோசித்து, முனியராஜை விட்டு விலகி விட்டதாக சொல்லப்படுகிறது.அம்மாவின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட மாணவி, முனியராஜுடன் பேசுவதை தவிர்க்க, அது முனியராஜுக்கு ஆத்திரத்தை கொடுத்திருக்கிறது. மாணவியை விட்டு விலக மறுத்த முனியராஜ் துரத்தி துரத்தி கட்டாயப்படுத்தி காதலை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியிருக்கிறான். ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த மாணவி முனியராஜை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, போகிற, வருகிற போதெல்லாம் வழியில் நின்று கொண்டு வம்பிழுத்து மாணவியை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.மைனர் மாணவிக்கு தொந்தரவு கொடுத்து வந்த முனியராஜை கண்டித்து வைக்குமாறு மாணவியின் தாய் கவிதா, அவனது வீட்டுக்கே சென்று சொல்லி வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், முனியராஜின் குரூர புத்தி அடங்கவில்லை. எப்படியாவது மாணவியை தன் வயப்படுத்த வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்த ஆசை நிறைவேறாததால், தனக்கு கிடைக்காத மாணவி உயிரோடு இருக்கவே கூடாது என்ற கொலை வெறி எண்ணம் முனியராஜின் மனதில் ஏற்பட்டிருக்கிறது.மாணவி ஷாலினியை கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறான் அந்த கொடூரன். சம்பவத்தன்று வழக்கம் போல மாணவி ஷாலினி தனது தோழிகளுடன் பள்ளிக்கு புறப்பட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்து பிடித்து பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே கையில் காய்கறி வெட்டும் கத்தியுடன் காலன் போல காத்திருந்துள்ளான்.நடந்து வந்து கொண்டி ருந்த மாணவியிடம் பேசுவது போல நெருங்கிச் சென்ற முனியராஜ், பின்னங்கழுத்திலேயே கத்தியால் குத்தியிருக்கிறான். கழுத்தில் குத்தியதில் மாணவிக்கு ரத்தம் பீறிட்டு தெறித்திருக்கிறது. பின்னர், கொடூரனிடம் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள மாணவி போராடிய நிலையில், இன்னொரு கத்தி குத்து கண்ணுக்கு கீழே கன்னத்திலும், வயிற்றிலும் விழுந்து இருக்கிறது.மாணவி கத்தியால் குத்தப்பட்டதை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து வீட்டுக்கு ஓடிச் சென்று தகவலை சொல்ல, ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் வேறு வழியில்லாமல் குத்துப்பட்ட மாணவியை பைக்கிலேயே தூக்கி வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள் உறவினர்கள்.ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு வந்த சில நிமிடங்களிலேயே மாணவி உயிரிழந்து விட்டார்.மாணவி உயிரிழந்த செய்தி காட்டுத் தீ போல பரவ, உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்பாக கூடி அழுது கதறினர்.பார்த்து பார்த்து வளர்த்த தலை மகளை இப்படி கொலை வெறியனுக்கு தாரை வார்த்து விட்டோமோ என்ற ஆற்றாமையில் மாணவியின் தாய் கவிதாவும், தந்தை மாரியப்பனும் அழுது கதறியது கண்களை குளமாக்கியது.மாணவியை குத்தி கொலை செய்த கொலையாளி முனியராஜ், கொலைக்கு பயன்படுத்திய கத்தியோடு துறைமுகம் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவனை தங்களிடம் ஒப்படைக்க சொல்லி, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர் மாணவியின் உறவினர்கள்.காவல் நிலையத்திற்கு முன்பாக போலீசார் அரணாக நின்றிருந்த நிலையில், அவர்களை தள்ளி விட்டு விட்டு உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என கொந்தளித்த உறவினர்கள், போலீஸ் மீதும் குற்றம்சாட்டி மருத்துவமனைக்குள்ளேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கொந்தளித்தனர். ஒரே ஊருக்குள் இருந்து கொண்டே ஒரு தலை காதலால் மாணவியை துரத்தி துரத்தி சுற்றி சுற்றி வந்து முனியராஜ் டார்ச்சர் செய்திருக்கிறான். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் இருந்து வந்த மாணவியை வழிமறித்து டார்ச்சர் செய்த முனியராஜை அக்கம்பக்கத்தினர் கண்டித்து அனுப்பி வைத்து விட்ட நிலையில்,கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியுடன் வந்து நினைத்ததை நடத்தியிருக்கிறான்.இதையும் பாருங்கள் - குழந்தைகளுக்கு கண் பரிசோதனை அவசியம் ஏன்?மருத்துவரின் விளக்கம் | Child Eye Care | Kids Health Tips