தஞ்சை பேருந்து நிலையத்தில் உள்ள சுவீட் கடையில் கடை ஊழியர்கள் அசந்த நேரம் பார்த்து, யுபிஐ ஸ்டிக்கரை மாற்றி ஒட்டி இளைஞர் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார். டெக்னாலஜி எவ்வளவு தூரத்துக்கு வளர்ந்து வந்தாலும், ஒரு பக்கம் மோசடிகளும் வளர்ந்து வருவதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. பணப் பரிமாற்றத்தை நெறிப்படுத்த கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலேயே சமீபகாலமாக மோசடிகள் தலைவிரித்தாடுவதற்கான சான்று தான் இந்த சம்பவம். பெட்டி கடை முதல் பெரிய கடைகள் வரை யுபிஐ பரிவர்த்தனை மூலமாக தான் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி வருகின்றனர். சொல்லப்போனால் யுபிஐ பரிவர்த்தனை இல்லாத கடைகளே அரிது தான். அது போல தான் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சுவீட் கடையில், வாங்கும் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் பெறப்படுகின்றன. கடந்த 12ஆம் தேதி கியூஆர் கோடை ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் கடையின் வங்கி கணக்கிற்கு வரவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர், கடையின் யுபிஐ கியூஆர் கோடை எடுத்து பார்த்த போது, அதன் மீது வேறொரு கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். பின்னர் சிசிடிவி கேமராவையும் சோதனை செய்து பார்த்ததில், இளைஞர் ஒருவர் கூல்டிரிங்ஸ் குடிப்பதை போல் நடித்து, யுபிஐ கியூஆர் கோட் ஸ்டிக்கரை ஒட்டி பித்தலாட்டம் செய்தது தெரிய வந்தது. கடையின் ஒருநாள் வருமானத்துக்கு, இளைஞர் வேட்டு வைத்த நிலையில், அன்றைய நாளே மோசடித்தனத்தை உரிமையாளர் கண்டுபிடித்ததால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பதை போல், ஒரு நாள் வருமானம் மட்டும் திருடப்பட்டது. ஏடிஎமிற்கோ, வங்கிகளுக்கோ சென்று பணம் எடுத்து செலவு செய்வதை காட்டிலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் ஸ்கேன் செய்து வரவு செலவுகளை பார்ப்பதில் சுலபம் என்பதால் மக்கள் அதனை விரும்புகின்றனர். இவற்றை பயன்படுத்திக் கொண்ட டிஜிட்டல் மோசடிக்காரர்கள் அப்பாவிகளை ஏமாற்றுவதால் மக்கள் உஷாராகவே இருக்க வேண்டும்.