’மாஸ்டர்’ படத்தில் நடித்திருந்த பெண் மருத்துவர் ஒருவர் தனது கிளினிக்கில் நிகழ்ந்த திருட்டு சம்பவத்தை பற்றியும், அந்த திருடனை தாம் எப்படி இரவோடு இரவாக சென்று பிடித்தேன் என்பதையும் பற்றி, இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை கூட்டியுள்ளார்.நட்ட நடுராத்திரியில் தனி ஒரு பெண்ணாய் திருடனை தேடிப் பிடித்து போலீசையே வாய்பிளக்க வைத்த சிங்கப்பெண் தான் இவர். லேப்டாப் திருடனை பிடித்தது எப்படி? என பக்கம் பக்கமாய் விவரித்திருக்கும் இவர், வழக்கம் போல் போலீசார் கம்பி நீட்டியதாக கூறியிருப்பது தான் ஹைலைட்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் கிளினிக் ஒன்றை நடத்தி வரும் பல் மருத்துவரான ஷில்ஃபா நிகர் என்பவர், விஜயின் மாஸ்டர் படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி மேலும் சில படங்களிலும் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக தமது கிளினிக்கில் நடந்த திருட்டு சம்பவம் மாநகரம் படத்தில் வரும் காட்சியை போல் இருந்ததாக கூறி, இன்ஸ்டாவில் பதிவிட்டு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.கிளினிக்கை மூடும் நேரமாக பார்த்து வந்த மர்ம நபர் ஒருவன், ஊழியர்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு உள்ளே நுழைந்ததாக தெரிகிறது. கமுக்கமாக பதுங்கி பதுங்கி வந்த அந்த இளைஞன், டேபிளில் இருந்த லேப்டாப்பை லாவகமாக எடுத்துக் கொண்டு வெளியேறியிருக்கிறான். கழிவறைக்கு சென்று வந்த பெண் ஊழியர் லேப்டாப் களவு போனதை கண்டு பதறி போய், ஷில்ஃபாவிடம் போன் போட்டு புலம்பியிருக்கிறார்.இதையறிந்த ஷில்ஃபா முதலில் போலீசுக்கு தகவல் கூறிவிட்டு பின் அவர்களுடன் சேர்ந்து தேடுதல் வேட்டையையும் தொடங்கியிருக்கிறார். மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளில் இடம்பெற்றிருந்த இளைஞனின் முகத்தை கவனித்த போலீசாரும், இரவு சம்பிரதாயத்திற்கு தேடிவிட்டு காலையில் தேடிக்கொள்ளலாம் என எப்போதும் போல கம்பிநீட்டிவிட்டு சென்றதாக கூறியிருக்கிறார் ஷில்ஃபா.போலீசார் கைவிட்ட போதிலும், தனது முயற்சியை கைவிடாமல் ரோடு ரோடாக சென்ற ஷில்ஃபாவுக்கு அவ்வழியே சென்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். இந்த நேரத்தில் தனியாக செல்லவேண்டாம் என்றும், நானும் வருகிறேன் தேடுவோம் என்றும் கூறி, ஆட்டோ ஓட்டுநரும் உடன் சென்றிருக்கிறார். இதுதவிர பைக்கில் சென்ற இளைஞர்கள் சிலரும் ஷில்ஃபாவுடன் சென்றுள்ளனர்.கையில் குப்பை பையுடன் தூரத்தில் சென்ற ஒருவனை அடையாளம் கண்ட ஷில்ஃபா, வண்டியை நிறுத்திவிட்டு பக்கத்தில் சென்று விசாரித்துள்ளார். அதற்கு அந்த நபர், தாம் குப்பை அள்ளுபவன் என்றும், வீடு வாசல் குடும்பம் என எதுவுமில்லை என்றிருக்கிறான். சிசிடிவியில் இடம்பெற்ற இளைஞனுடன் ஒத்துப்போனாலும், அவன் அணிந்திருந்த சட்டை ஒத்துப்போகாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் ஷில்ஃபாவுக்கு சந்தேகம் வந்ததால் கையிலிருந்த பையை பிடுங்கி பார்த்ததில் லேப்டாப் இருந்திருக்கிறது. ஆத்திரமடைந்த ஷில்ஃபா, திருடனின் கன்னத்தில் பளாரென அறைந்ததுடன் அவனை பிடித்து போலீசிலும் ஒப்படைத்திருக்கிறார். பெண்கள் சாலையில் தனியாக நடந்து சென்றாலே அவர்களை விசிலடித்து தனிமையிலிருக்க கூப்பிடுவதும், போகப் பொருளாக எண்ணி பயன்படுத்த துடிப்பதுமே வேலையாய் கொண்டிருக்கும் சில காம மிருகங்களுக்கு மத்தியில் இதுபோன்ற ஆண் தேவதைகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், இந்த சம்பவத்தில் போலீசாரின் அலட்சியம் என்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்பது தான் அனைவரது ஆதங்கமும் கூட....இதையும் பாருங்கள் - 4 வயது சிறுமியிடம் சில்மிஷ வேலை - பூங்காவில் புரட்டியெடுத்த மக்கள் - கட்டி வைத்து உதை