சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் செம்மொழி சாலை, புதுநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள 'ஜெப்ட்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் கிடங்கில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் இரண்டாம் தளத்தில் உள்ள இந்த நிறுவனத்தில் உள்ள உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் குளிரூட்டப்பட்ட அறையில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு அதனை தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்து சென்றனர். இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் மீதமுள்ள பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மேடவாக்கம் மற்றும் தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 30 பேர் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தும் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கிடங்கில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் முற்றிலும் எரிந்தது. இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று(16.01.2026) இரவு ஏற்பட்ட விபத்தின் அதிர்ச்சி மறையும் முன்பே அதே கட்டிடத்தில் அதே நிறுவனத்தில் அதே இடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தீப்பற்றி எரிந்த நிலையில், அங்கு உருக்குலைந்து கிடந்த கழிவுப் பொருட்கள் மற்றும் எரிக்கப்பட்ட பொருட்கள் முறையாக அகற்றப்படாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு ஏற்பட்டதற்கான சரியான காரணம் என்ன? பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா? ஒரே இடத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்ன ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.இதையும் படியுங்கள் : அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்