திருச்செந்தூர் அருகே கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாகவும், 7 மாதங்களுக்கு முன்பு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் கூறி, இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கேட்டு கண்ணீர் சிந்தும் சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டினத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் டார்லிங்டன்ராயன். இவர், தனது 2ஆவது மகள் டெவினாவை, தேனியில் அன்னை பேக்கரி வைத்துள்ள பெர்கின்ராயன் - கார்மெல் தம்பதியின் 2ஆவது மகன் மிலான் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்தின்போது, 100 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. எனினும் திருப்தியடையாத கணவர் வீட்டார், கூடுதல் வரதட்சணையாக காரும், மிலானுக்கு பேக்கரியும் வைத்துத் தருமாறும், டெவினாவை கடந்த 4 ஆண்டுகளாகவே கொடுமைப்படுத்தி வந்ததாக புகார் கூறப்படுகிறது.மேலும், டெவினாவை அவ்வப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குழந்தை பெற விடாமல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே, தடுப்பு முயற்சிகளையும் மீறி, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு டெவினாவுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் பிறகு, டெவினா தனது கணவர் மிலானுடன் தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு மிலான் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில்தான், டெவினா பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது பெற்றோர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்தான், தனது மகள் தற்கொலைக்கு முயன்றதாக டார்லிங்டன்ராயன் புகார் கூறுகிறார்.அதேசமயம், வரதட்சணை கொடுமை மட்டுமல்லாது தனது இரட்டை பெண் குழந்தைகளையும் கணவர் வீட்டார் கொலை செய்ய முயன்றதாக பகீர் கிளப்புகிறார் டெவினா.மேலும், தனது கணவர் மிலானை, மாமியார் கார்மெல் மற்றும் கணவரின் அண்ணன் மிராஜ் ஆகியோர் சேர்ந்து, தன்னை சந்திக்க விடாமலும், தன்னுடன் பேச விடாமலும் வீட்டில் சிறை பிடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டும் டெவினா, தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.