ராமநாதபுரத்தில், அரசு சமூக நீதி மாணவர் விடுதியில் பட்டியலின மாணவர் மீது சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் எதற்காக தாக்கப்பட்டார்? நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...விளையாட்டாக கிழிக்கப்பட்ட நோட்டுக்காக, ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் சேர்ந்து, அப்பாவி பட்டியலின சிறுவனை ஈவு இரக்கமின்றி தாக்கும் வேதனைக்குரிய காட்சி.ராமநாதபுரம் மாவட்டம், அம்மா பூங்கா பகுதியில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பட்டியலின மாணவர்கள் 10 பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 14 பேரும், பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 42 பேரும் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்குள்ளே ஏற்பட்ட சிறு மோதல், சாதி ரீதியிலான தாக்குதலாக மாறியிருப்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.விடுதியில் தங்கி படித்து வரும் பட்டியலினத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக வேறு ஒருவரின் பிராக்டிக்கல் நோட்டை கிழித்ததாக சொல்லப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவன், நடந்ததை போய் சக மாணவர்களிடம் கூறியதாக தெரிகிறது. பட்டியலின மாணவர் என்பதால் பிற சமூக மாணவர்கள் இணைந்து அந்த மாணவனை அறைக்கு அழைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.கன்னத்தில் ஓங்கி அறைந்தும், தலையில் அடித்தும் தாக்கிய மாணவர்கள், சிறுவன் அழுவதை கண்டும் மனமிறங்காமல் மாறி மாறி தாக்கியுள்ளனர். அடித்து அடித்து அப்பாவி மாணவனின் கன்னங்கள் இரண்டும் சிவந்து போனதை கண்டு கிண்டலடித்த மாணவர் ஒருவர், தண்ணீரால் முகத்தை கழுவ சொல்லி மீண்டும் அடி கொடுத்து அத்துமீறியிருக்கிறார். ஒட்டுமொத்த விடுதியுமே அதிரும் அளவுக்கு அடிவாங்கிய மாணவர் கதறி அழுத போதிலும் தட்டிக்கேட்க நாதியில்லாமல் கொடூர சம்பவம் தொடர்ந்திருக்கிறது. மாணவரை தாக்கும் நிகழ்வை கூச்சமே இல்லாமல் வீடியோ எடுத்த சக மாணவர்கள், அதனை வெளியிட்டு தற்பெருமை பேசியது இன்னும் ஆதங்கப்பட வைக்கிறது. படிக்கும் வயதில் சாதிய எண்ணத்தோடு சக மாணவரை தாக்கியது மட்டுமல்லாமல், ஆபாச வார்த்தைகளை பேசியும் அத்துமீறியிருக்கின்றனர்.சம்பவம் நடந்தது பற்றி விளக்கம் கேட்பதற்காக விடுதி காப்பாளர் சண்முகராஜை தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்க மறுத்திருக்கிறார். சமையலரோ, வார்டனோ, காவலாளியோ என யாரும் சம்பவத்தன்று இல்லாததும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.பட்டியலின மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நியூஸ் தமிழில் செய்தி வெளியானதற்கு பின்பே, முழித்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், தவறிழைத்த மாணவர்களை விடுதியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.மேலும், சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் குழுவை அமைத்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டதன் அடிப்படையில், அந்த குழுவினர் விடுதிக்கு நேரில் சென்று விசாரணையை நடத்தியுள்ளனர். தவறிழைத்த மாணவர்கள் மீது அசுர வேகத்தில் நடவடிக்கை பாய்ந்த நிலையில், அதனை தடுக்க வேண்டிய காப்பாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுகிறது. இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | பாழடைந்த கட்டிடத்தில் ஆண் சடலம் - தூங்கா நகரை நடுங்க விட்ட கொ*ல | Crime News