நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் சுமார் 20000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா மற்றும் தாடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும் சிரமத்திற்கு மத்தியில் விவசாயிகள் நெற்பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். குறிப்பாக கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பூண்டி, காமேஸ்வரம், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேரடி விதைப்பு முறையில் கோ–51, ஏ.டி.டி–46 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் விதைத்த நிலையில், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அறுவடைக்கு தயாராகும் சூழல் இருந்தது. இந்தப் பகுதிகளில் மானாவரி சம்பா எனப்படும் ஒருபோக சாகுபடி மட்டுமே நடைபெற்று வருவதால், விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25,000 முதல் 30,000 வரை செலவு செய்து பயிர்களை பராமரித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது நெற்கதிர்கள் முற்றும் பருவத்தில் குலை நோய் தாக்கி, நெற்பயிர்கள் பதராக மாறுவதோடு, நெல்மணிகள் அனைத்தும் கருப்பு நிறமாக மாறி கருக்காயாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 1000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த வைரஸ் தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஏற்கனவே கனமழை, புயல் உள்ளிட்ட பேரிடர்களில் இருந்து நெற்பயிர்களை பெரும் சிரமத்துடன் காப்பாற்றி வந்த விவசாயிகள், தற்போது இந்த நோய் தாக்குதலால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, வேளாண்துறையினர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நோய் கட்டுப்பாட்டிற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும் வகையில், உரிய ஆய்வு மேற்கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையும் படியுங்கள் : 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகிறது அமர்க்களம்