பாம்பன் பாலத்தில், காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடலில் கலக்கும் பல லட்சம் லிட்டர் குடிநீரால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் தீவு பகுதிகளான பாம்பன், தங்கச்சி மடம், அக்கா மடம், வேர்க் கோடு, புது ரோடு உள்ளிட்ட தீவு பகுதி முழுவதும் காவிரி கூட்டுக் குடிநீர், மண்டபம் பூங்கா அருகே உள்ள நீர்த் தேக்க தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாம்பன் சாலை பாலம் வழியாக வரும் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் கடலில் கலந்து வருவதால், தீவு பகுதி முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது இதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.