ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். புதிதாக தொடங்கப்பட்ட நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துகள், கல்லூரி விளையாட்டு மைதானத்தின் பின்புறம் உள்ள இடத்தில் கொட்டப்பட்டு இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி இரவு மருத்துவக் கழிவுகள் எரிக்கப்பட்ட போது துர்நாற்றத்துடன் கரும்புகை வெளியேறி அருகில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுவிட முடியாத சூழல் ஏற்பட்டது.