சேலம் மாவட்டத்தில் மூலம், பௌத்திரத்திற்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற வடமாநில ஆசாமிக்கு, கிராம மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த மருத்துவப் படிப்பும் படிக்காமலேயே கிளினிக் நடத்த வந்த போலி மருத்துவர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.மேற்குவங்க மாநிலம், 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த விஸ்வாஸ், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் கடந்த பல ஆண்டுகளாக மூலம், பௌத்திரம் வியாதிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். ஆனால், இந்த மருத்துவமனைக்கு பெயர் பலகை எதுவும் கிடையாது. மூலம் பௌத்திரம் நோமிதா ஆயுர்வேத மெடிக்கல் என்கிற பெயரில் கிழிந்த பதாகை மட்டும் மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டிருக்கும். அதேசமயம், மருந்து, மாத்திரைகள் எழுதி தரும் சீட்டில், விஸ்வாஸ் கிளினிக் எனவும், டாக்டர் யமுனா MBBS எனவும் அச்சிடப்பட்டிருக்கும்.இந்த கிளினிக்கில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பெண் ஒருவர், மூல நோய்க்காக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அந்த மருத்துவமனையில் டாக்டர் எனக் கூறி சிகிச்சை அளித்து வரும் விஸ்வாஸ், அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். மேலும், அவ்வப்போது போன் செய்து, ஆபாசமான வார்த்தைகளால் வர்ணித்துள்ளார். இதனால், அந்த பெண் சிகிச்சைக்கு செல்வதை இடையில் நிறுத்தி விட்டார். எனவே, அந்த பெண்ணுக்கு விஸ்வாஸ் மீண்டும் போன் செய்து, சமாதானப்படுத்தி சிகிச்சைக்கு வரும்படி அழைத்துள்ளார்.இதையடுத்து, அந்த பெண் செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்கு வந்தபோது, சிறிது நேரம் நல்லவன் போல பேசிக் கொண்டிருந்த விஸ்வாஸ், திடீரென கதவை சாத்திவிட்டு மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவனை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பி, சொந்த ஊருக்குச் சென்று உறவினர்களிடம் விவரத்தை கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், அந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு நேராக மருத்துவமனைக்கு சென்று விஸ்வாஸை நையப்புடைத்தனர்.மேலும், இனி இந்த ஊரிலேயே இருக்கக் கூடாது எனவும் மிரட்டி விட்டுச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்திக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. டாக்டர் எனக் கூறி சிகிச்சை அளித்து வரும் விஸ்வாஸிடம் விவரங்களை கேட்டபோது, அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், யமுனா MBBS என போட்டிருப்பது தனது சகோதரி எனவும் தெரிவித்தார். அதேசமயம், யமுனா எப்போதாவது தான் மருத்துவமனைக்கு வருவதாக கூறயவர், தாம் தான் முழுமையாக சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.நாம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு அமர்ந்திருந்த ராஜேஷ், நீங்கள் யார்? எதற்காக விசாரிக்கிறீர்கள்? என மிரட்டினார். நியூஸ் தமிழ் செய்திக் குழு என்று கூறியவுடன், தாம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் எனவும், இந்த தொகுதியின் வேட்பாளர் எனவும் அதிகாரமாக கூறிவிட்டு, பின்னர் அமைதியானார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், விஸ்வாஸ் எந்தவித மருத்துவ படிப்பும் படிக்கவில்லை என்பதும், டாக்டர் என்கிற பெயரில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் என்பதும் அம்பலமானது.ஆனால், அவர் அறுவைச் சிகிக்சைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் மருந்து, மாத்திரைகள் அனைத்தும் அலோபதி மருத்துவர்கள் பயன்படுத்துபவை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்புகொண்டு பேசியபோது, தனக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், இதுகுறித்து வெளியே தெரிந்தால் தனது வாழ்க்கை பாழாகிவிடும் என்பதால் போலீஸில் புகார் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தவர், தனது பெயர் எந்தக் காரணம் கொண்டும் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.இது ஒருபுறம் இருக்க, நாமக்கல் மாவட்டம் முழுவதுமே இதுபோன்று 30க்கும் மேற்பட்ட மூலம், பௌத்திரம் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாகவும், அவை அனைத்தும் வடமாநில ஆசாமிகளால் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து போலீஸாரும், சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற மருத்துவமனைகளை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையும் பாருங்கள் - POCSO வழக்கில் திடீர் திருப்பம், நடுரோட்டில் களமிறங்கிய மாணவிகள் | Thoothukudi | POCSO | News Tamil