திருவள்ளூர் மாவட்டத்துக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால், தவெக தலைமை அலுவலகம் முன்பே அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தை சர்வ சாதாரணமாக கடந்து சென்ற தவெக தலைமை, நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நிர்வாகிகளை மேலும் கடுப்படைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெகவுக்குள், வெடிக்கும் நீயா நானா பஞ்சாயத்தால் கட்சி வளர்ச்சி தான் பாதிக்கும் என அக்கட்சியினரே புலம்பி தள்ளுகின்றனர். தவெக தொடங்கி இரண்டு ஆண்டுகளாகிய நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கவுள்ளது. தவெகவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு பொறுப்பு வழங்கப்படுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டனால் புது பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது. தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், பணம் கொடுப்பவர்களுக்கும் மட்டும் மாவட்ட ரீதியிலான பொறுப்புகளை போட்டுக்கொடுப்பதாக அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இது போதாததுக்கு அவர், பதவி ஆசையை காட்டி பணம் பெற்றுக்கொண்டு பலரை டீலில் விட்டதாக சொல்லப்படுகிறது. மாவட்ட செயலாளர் மணிகண்டன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளராக அறியப்படும் நிலையில், தனது பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளர் பிரதீப்பை கட்சியை விட்டு அவர் நீக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன் மீது அதிருப்தி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மாவட்டச் செயலாளர் மணிகண்டன் நடவடிக்கையை கட்சி தலைமை கண்டும் காணாமல் விட்டதன் விளைவு தான், தவெக தலைமை அலுவலகத்தின் முன்பே திருவள்ளூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் போர்க்கொடியை தூக்கிட தூண்டியிருக்கிறது. இதனால் ஏக கடுப்பில் ஆழ்ந்த மணிகண்டன், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளான குமரன், சதீஷ், தமிழரசன், பிரதீப், சுப்ரமணி, இளையமுருகன் ஆகியோர் தவெகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு, தவெக தொண்டர்கள் அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என எச்சரித்தார். திமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து வந்த இவர்கள், ஆசைவார்த்தை கூறி சிலரை கைக்குள் போட்டு வைத்துக்கொண்டு கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக அடுக்கடுக்கான புகார்களை தனது அறிக்கையில் தெரிவித்தார். அவர்கள் 6 பேரின் தூண்டுதலால், இப்போராட்டம் நடந்ததாக மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தன்னிச்சையாக செயல்பட்டு அவர்களை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. மணிகண்டன் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், அது தவெக தலைவர் விஜய்க்கும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும் தெரியவில்லை என நிர்வாகி சாடியுள்ளார். தவெக தலைமை அலுவலகம் முன்பே போராடியதை கூட தலைமை விசாரிக்காமல், மாவட்டச் செயலாளரே தன்னிச்சையாக நடந்து கொண்டது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சொல்வதை எவரும் கேட்காமல், புஸ்ஸி ஆனந்த் சொல்வதையே கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே புஸ்ஸி ஆனந்தா? ஆதவ் அர்ஜுனாவா? என்ற யுத்தம் அவரவர் ஆதரவாளர்களிடையே உருவாகியுள்ளது. அடித்தளம் உறுதியாக இருந்தாலே, கட்டடம் ஆட்டம் காணாமல் இருக்கும் என புரிந்துகொண்டு தவெக தலைமை செயல்பட வேண்டுமென அக்கட்சி நிர்வாகிகளே பொருமி வருகின்றனர்.