திருப்பூர் அருகே, ஸ்கூட்டியில் யூடர்ன் அடித்த முதியவர் மீது ட்ரிப்பிள்ஸில் வந்த கல்லூரி மாணவர்களின் பைக் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நடுநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்பதை விபத்து தொடர்பான வீடியோவை பார்த்தாலே புரியும் எனக்கூறும் காவல்துறையினர், அசுரவேகத்தில் பறந்து எந்த கோட்டையை பிடிக்கப் போகிறோம் எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், மசனல்லாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடாசலபதி. 65 வயதான இவர், குப்பிச்சிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு அங்குள்ள சாலையில் யூடர்ன் அடித்துள்ளார்.அப்போது, அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள AG என்ற தனியார் கல்லூரியில் படித்து வரும் ரின்வான், கார்த்தி, வெற்றிவேல் ஆகிய 3 மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர். யூடர்ன் அடித்த முதியவர் மீது மாணவர்கள் வந்த பைக் அசுரவேகத்தில் மோத, 2 இரு சக்கர வாகனங்களும் சாலையில் தூக்கி வீசப்பட்டு, தெறித்து விழுந்தது. இந்த விபத்தில் மாணவர்கள் 3 பேரும் காயமடைந்து ஆளுக்கொரு பக்கமாக கிடந்த நிலையில், முதியவர் வெங்கடாசலபதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முதியவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.மாணவர்கள் வருவதை முதியவர் கவனிக்கவில்லை என ஒருதரப்பினர் கூறிவரும் நிலையில், மற்றொரு தரப்பினர் ஒரே பைக்கில் 3 பேர் வரக்கூடாது என்பது கல்லூரி மாணவர்களுக்கு தெரியாதா? சாலையின் குறுக்கே முதியவர் வந்தபோது அதை கவனிக்காத அளவுக்கு அப்படி என்ன வேகம்? அவ்வளவு அவசரமாக சென்று எந்த கோட்டையை பிடிக்கப் போகின்றனர்? அவசரமாக சென்றதால் பறிபோன முதியவரின் உயிர் திரும்பி வருமா? என கேள்விக்குமேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அதோடு, உயிரிழந்த முதியவர் மற்றும் அசுரவேகத்தில் பறந்து வந்த 3 மாணவர்கள் என, நான்கு பேருமே ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறும் மக்களும், காவல்துறையினரும் வாகனஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.குறிப்பாக, மாணவர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் பெற்றோர் மாணவர்களுக்கு பைக்குகள் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.அதேபோல், விபத்து நடந்த இடத்தில் ஸ்பீடு பிரேக்கர் மற்றும் டிவைடர் இல்லாததால் அதனை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.