திருச்சியில், கடந்த ஐந்தாண்டுகளாக உறவினர்களாலேயே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் உறவினரான திமுக நிர்வாகி ஒருவர் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளின் கையில் சிக்கிய ஒற்றை ஆதாரத்தை கொண்டு விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாய், சிறுமி ஒருவர் பலரால் சீரழிக்கப்பட்ட கொடூர சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.கடந்த அக்டோபர் மாதத்தில் புதிதாக பொறுப்பேற்ற திருச்சி குழந்தைகள் நலக்குழுவின் நிர்வாகிகள், சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான கோப்புகளை தூசு தட்டியுள்ளனர். அப்போது தான், 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், அதன் பின் கருத்தரித்து குழந்தையை பெற்றெடுத்ததும் அதிகாரிகளுக்கு தெரிய வந்திருக்கிறது. பச்சிளம் குழந்தையை தங்களால் கவனித்துக் கொள்ள இயலாது என கூறி, குழந்தைகள் நலக்குழுவிடம் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, சிறுமியின் பெற்றோர் கமுக்கமாக நடையை கட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.இந்நிலையில், இந்த சம்பவம் குறித்த கோப்புகளை புரட்டிய குழந்தைகள் நலக்குழுவின் புதிய நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட சிறுமியை கண்டறிந்து விசாரணை நடத்தியதில் நடுநடுங்க வைக்கும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. தென்னூரை சேர்ந்த அந்த சிறுமி ஆறாவது படிக்கும் போது, அரையாண்டு விடுமுறையில் பரமத்திவேலூரில் உள்ள தனது பாட்டியை கவனித்துக் கொள்வதற்காக தாத்தா வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு பாட்டிக்கு தினமும் உணவு வாங்கி வருவதற்காக அருகிலிருந்த ஹோட்டலுக்கு சென்று வருகையில் அங்கு சப்ளையராக வேலை செய்யும் ரவி என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட ரவி, சிறுமியின் தாத்தா இல்லாத சமயமாக பார்த்து வீட்டிற்கு சென்று பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.தனக்கு நடந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்த போதும், அவரும் கண்டு கொள்ளாததால் தானும் அதை மறந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பியதாக சிறுமி கூறியிருக்கிறார். அடுத்ததாக 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, தனது தாய் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வந்த தாத்தா உறவுமுறை கொண்ட ஒருவரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக கூறி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்திருக்கிறார் அந்த சிறுமி. அதோடு நில்லாமல், சிறுமியின் சொந்த தாத்தாவும் காமவெறி பிடித்து பேத்தி என்றும் பாராமல் அத்துமீறி நடந்து கொண்டதோடு, தனது தம்பியும் திமுக மாவட்டச் செயலாளருமான காளை என்பவருக்கும் இரையாக்கி வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்பட்டிருப்பது, நெஞ்சை படபடக்க செய்திருக்கிறது.ஒருமுறை வன்கொடுமை செய்த அந்த திமுக நிர்வாகி, மீண்டும் மீண்டும் சிறுமியை வீட்டிற்கு அழைத்துள்ளான். அப்போது அவரது நண்பர்களான செல்வராஜ், சரண்ராஜ் குமார், மோகன்ராஜ், சரவணன், சந்திரன் ஆகியோரும் சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டு வன்கொடுமை செய்ததும் அம்பலமாகியிருக்கிறது. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் சிறுமியின் சொந்த தாய்மாமாவும் தனது காம இச்சையை தீர்த்துக் கொண்டதாக கூறப்படுவது பகீர் கிளப்புகிறது.இதுதவிர, நீலமேட்டை சேர்ந்த சிறுமியின் அத்தை மகனான இளைஞரும், அங்கு கோவில் திருவிழாவுக்கு மைக் செட் போட வந்த கவின் என்பவனும், சீட் போட்ட கொட்டகையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவத்தின் போது தான் சிறுமி கருத்தரித்ததும் தெரியவந்திருக்கிறது. சிறுமியின் வயிறு நாளுக்கு நாள் பெரிதானதை கண்டு திருச்சி ஜெனட் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய், மகளுக்கு நேர்ந்த கொடுமையை கேட்டபின் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கருவை கலைப்பதிலேயே குறியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.8ஆம் வகுப்பு படிக்கும் போதே ஆண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி, குழந்தையை காப்பகத்தில் கொடுத்துவிட்டு தாயுடன் சென்று தலைமறைவானதாக தெரிகிறது. அதன் பிறகு, கடந்த ஜனவரியில் தனது தாயுடன் கரூரில் தங்கியிருந்த சிறுமிக்கு, தாயின் நண்பரான செல்லத்துரை என்பவரும் சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரிந்தும் சிறுமியின் தாயார் கண்டும் காணாதது போல் இருந்ததாக கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.ஒன்றல்ல... இரண்டல்ல... 10க்கும் மேற்பட்டவர்களால் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறுமி ஒருவர் தொடர் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதும் அதை பெற்றோரே கண்டும் காணாமல் இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்து பூதாகரமாகியுள்ளது. திருச்சியை உறைய வைத்த பாலியல் சம்பவம் பற்றி குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அளித்த புகாரின் பேரில், திமுக நிர்வாகி உட்பட மொத்தம் 15 பேர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாய்-தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதையும் பாருங்கள் - காதலனால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்