தென்காசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார், தனது விவசாய நிலத்தில் ஊருணி தோண்டுவதாக கூறிவிட்டு, சட்டவிரோதமாக கல்குவாரி தோண்டுவதாக புகார் எழுந்துள்ளது. பயங்கர வெடிசத்தத்துடன் பக்கத்து நிலத்தில் பெரிய கற்கள் விழுவதால் ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் வேலை செய்ய வேண்டி உள்ளதாக கூறும் விவசாயிகள், உயிர் பயம் காரணமாக தங்கள் நிலத்திற்கு யாரும் வேலைக்கு வருவதும் இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.வண்டியில் செல்லும் போது தான் ஹெல்மெட் கட்டாயம். ஆனால், தங்களின் விவசாய நிலத்தில் வேலை செய்தாலும் ஹெல்மெட் கட்டாயம்தான் என்பதே இந்த விவசாயிகளின் புலம்பல்.தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள அயன் சுரண்டை பகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு சொந்தமாக பல ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த இடத்தில் பழனி நாடார் ஊருணி தோண்டி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அவர் தோண்டுவது ஊருணியே இல்லை என்றும், அது கல்குவாரி எனவும், அந்த கல்குவாரியில் இருந்து 500 மீட்டர் தூரம்வரை பெரிய பெரிய கற்களாக தெறித்து தங்கள் விவசாய நிலத்தில் விழுவதாகவும் குற்றம்சாட்டிய பக்கத்து விவசாய தோட்ட உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அத்தனை அதிகாரிகளிடம் புகாரும் அளித்துள்ளனர். அந்த புகார், கிணற்றில்போட்ட கல்போன்று கிடப்பதாக கூறும் விவசாயிகள் தங்கள் மனக்குமுறலையும் கொட்டி உள்ளனர்.முதலில் ஊருணி, அடுத்து கிணறு என கதைவிட்ட பழனி நாடார் தற்போது கல்குவாரிதான் தோண்டுகிறார் என்பதை பார்த்தாலே தெரிகிறது எனக்கூறிய விவசாயிகள், அதற்கு புவியியல் துறையிலேயோ அல்லது சுரங்கத்துறையிலேயோ அனுமதி பெறவில்லை என குற்றம்சாட்டினர்.பயங்கர சத்தத்துடன் எந்நேரமும் வெடி வைப்பதால் கற்கள் பக்கத்து விவசாய நிலத்தில் விழுவதாகவும், அதனாலேயே ஹெல்மெட் போட்டுக் கொண்டு வேலை பார்ப்பதாகவும் கூறிய விவசாயிகள், தங்கள் நிலத்திற்கு யாரும் பணிக்கு வருவதில்லை எனவும் வருத்தம் தெரிவித்தனர்.அது மட்டுமா? பக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மீது கற்கள் விழுவதாகவும், அதனால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் புகார் தெரிவித்த விவசாயிகள், அடிக்கடி கனரக வாகனங்கள் சென்று வருவதாலும் ஆபத்து உள்ளதாக கூறினர். விவசாயிகளின் இந்த புகார் குறித்து பழனி நாடாரிடம் கேட்டபோது, தனது விவசாய நிலத்தில் ஏற்கனவே 2 கிணறுகள் உள்ளதாகவும், அந்த கிணற்றில் உள்ள தண்ணீர் மட்டுமே விவசாயத்திற்கு போதவில்லை எனவும் அதனாலேயே பெரிய கிணறு தோண்டுவதாகவும் கூறியதோடு உரிய அனுமதி பெற்றே தோண்டுவதாகவும்கூறி அதற்கான ரசீது ஒன்றை காட்டி உள்ளார்.இந்நிலையில், பழனி நாடார் தோண்டுவது ஊருணியா? அல்லது கிணறா? அல்லது பக்கத்து தோட்ட விவசாயிகள் சொல்வதுபோன்று கல்குவாரியா என்பதை அதிகாரிகள் தான் விசாரணை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என சுரண்டைவாசிகள் கூறி வருகின்றனர். இதையும் பாருங்கள் - வன்கொடுமை செய்து சிறுமி கொ*ல, கனமழையால் வெளியே தெரிந்த 'சடலம்' | CrimeNews | LatestNews