சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், புதன்கிழமை வரை நடைபெறும் மாநில அளவிலான உணவுத் திருவிழாவில், ஆம்பூர் பிரியாணி முதல் நீலகிரி ராகி களி வரை 235 உணவு வகைகள் இடம் பெற்றுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையான உணவு பொருட்களை வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர்.சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், 4 நாட்கள் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாநில அளவிலான உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த உணவு திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களின் சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளின் தனித்துவமான உணவு பொருட்கள் இடம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு அரங்கமாக சென்று பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக் குழுவினர் கொடுத்த உணவுகளை சுவைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பிரியாணியில் ஆம்பூர், திண்டுக்கல், கொங்கு மட்டன் பிரியாணி என தனித்தனியாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் மீன் புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, விருதுநகர் புரோட்டா என தமிழகத்தில் கிடைக்கும் அனைத்து உணவுகளுக்கு ஒரே இடத்தில் கிடைத்ததால் உணவு பிரியர்கள் போட்டி, போட்டு வாங்கி சுவைத்தனர். அதே போல் பாரம்பரிய உணவுகளான தருமபுரி ராகி அதிரசம், நீலகிரி ராகி களி, தென்காசி உளுந்தங்களி, தின்பண்டங்களான சேலம் தட்டு வடை, காஞ்சிபுரம் கோயில் இட்லி மற்றும் தூத்துக்குடி யாழ் உணவுகள் என அனைத்துமே கிடைக்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.12 சிறப்பு அரங்குகளில் அடுப்பில்லா முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளும், இயற்கை சார்ந்த பனை பொருட்கள் 90 கிட்ஸ்களின் நினைவுகளை தூண்டும் வகையில் உள்ள தின்பண்டங்கள், செட்டிநாடு பலகாரங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் இந்த பகுதிகளில் மட்டும் தான் கிடைக்கும் என்ற உணவு பொருட்கள் ஒரே இடத்தில் கிடைத்ததால், சென்னை வாசிகள் குடும்பத்துடன் உணவு திருவிழாவில் பங்கேற்று தேவையான உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.