கோவை அருகே போலி நகைகளை அடகு வைத்து, மோசடியில் ஈடுபட்ட பெண்ணை, கடை ஓனர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்த நாள் கடைக்கு வந்து, நகைகளை அடகு வைத்த பெண் காரில் சென்றதாக கூறப்படும் நிலையில் அந்த கார் யாருடையது? மோசடி பெண்ணின் பின்னால் பெரிய வழிப்பறி கும்பல் ஏதேனும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.கோவை, சரவணம்பட்டி - துடியலூர் செல்லும் சாலையில் உள்ள சின்னவேடம்பட்டி பகுதியில், சிவசெல்வி அன்கோ என்ற பெயரில் நகை அடகு கடை உள்ளது. ரத்தினபுரியை சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு சொந்தமான அடகு கடைக்கு கடந்த 8ஆம் தேதி வந்த பெண் ஒருவர், நகை ஒன்றை அடகு வைத்து குறிப்பிட்ட தொகை வாங்கி உள்ளார். அதேபோல், மறுநாளான 9ஆம் தேதியும், அதன் பிறகு 2 நாட்கள் கழித்து மீண்டும் 12ஆம் தேதியும் அதே பெண், நகையை கொடுத்து பணம் வாங்கி உள்ளார். மொத்தமாக 3 நாட்களும் சேர்த்து ஒன்றரை லட்சம் ரூபாய், அந்த பெண் வாங்கி இருந்த நிலையில், ஒரேநேரத்தில் அடகு வைக்காமல் அடுத்தடுத்த நாள் வந்து தனித்தனியாக நகைகளை ஏன் அடகு வைக்க வேண்டும்? அதில் ஏதாவது திருட்டுத்தனம் இருக்குமா? என்ற சந்தேகம் கடை ஓனரான ராஜாராமுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த நகைகளை சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது தான் அந்த பெண் அடகு வைத்த நகைகள் அனைத்துமே போலி என்பது தெரியவந்தது.முதல்நாளே சோதனை செய்யாமல் விட்டுவிட்டோமே என்ற ஏமாற்றம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த பெண் மீண்டும் வர வாய்ப்புள்ளது, அதுவரை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் கடை ஓனர் ராஜாராம். மேலும், காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அந்த பெண் உஷாராகிவிடுவார், அதனால் நாமே பிடித்து ஒப்படைக்கலாம் என்றும் நினைத்துள்ளார். அவர் நினைத்ததுபோலவே, ஐந்தாவது நாளே அதாவது கடந்த 17ஆம் தேதி கடைக்கு வந்து, ஒரு ஜோடி வளையலை கொடுத்து 90 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார் அந்த பெண். அந்த வளையலை வாங்கிய ராஜாராம், தனது நண்பரிடம் தான் பணம் உள்ளது, சிறிதுநேரம் காத்திருங்கள் எனக்கூறி அந்த பெண்ணை காத்திருக்க வைத்துள்ளார். தொடர்ந்து, கடைக்கு வெளியே வந்து, தனது நண்பர் மகேந்திரன் என்பவருக்கு போன் செய்த ராஜாராம் நடந்த விவரத்தை கூறி கடைக்கு வருமாறு அழைத்துள்ளார். தனியாக வராமல் தன்னுடன் 3 நண்பர்களை மகேந்திரன் அழைத்துக் கொண்டு வந்த நிலையில், அந்த பெண்ணை 5 பேரும் சேர்ந்து கடுமையாக தாக்கி உள்ளனர்.போலி நகைகளை கொடுத்து வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு கூறி அடித்த அவர்கள், அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்றும் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் எந்த பதிலுமே சொல்லாததாக கூறப்படும் நிலையில், கடைக்கு பின்னால் உள்ள ஒர்க் ஷாப்பை ஒட்டியுள்ள ஒரு அறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று, அங்கும் வைத்து கட்டை மற்றும் கம்பால் தாக்கியதாக தெரிகிறது. அப்படியும், அந்த பெண் எந்த விவரத்தையும் சொல்லவில்லை என கூறப்படுகிறது. 2 மணிநேரம் இடைவெளிவிட்டு கேட்கலாம் என அதே அறையில் அந்த பெண்ணை அடைத்து வைத்துவிட்டு கடைக்கு வந்துவிட்டார் ராஜாராம்.தொடர்ந்து, மகேந்திரனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். இந்நிலையில், 2 மணிநேரம் கழித்து அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அந்த பெண் மூச்சுபேச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த ராஜாராம், அப்பகுதியில் நைட் ரவுண்ட்ஸ் வந்த போலீசாரிடம் போலி நகைகளை அடகு வைத்து அந்த பெண் பணம் வாங்கியது முதல் அறையில் அடைத்து வைத்து அடித்ததுவரை உண்மையை சொல்லி உள்ளார். அதன்பிறகு மருத்துவர்களை வரவழைத்து, அந்த பெண்ணை சோதித்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து போஸ்ட் மார்டத்திற்காக சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ராஜாராமை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்களையும் போலீசார் தேடி வரும் நிலையில் உயிரிழந்த பெண் யார்? எந்த ஊர் என விசாரணையில் இறங்கினர்.அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி பாகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி சுதா என்பவர் தான் போலி நகைகளை வைத்து பணம் பெற்றது தெரிய வந்தது.கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்த சுதா சேலத்தில் பழக்கடை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. அடகு கடைக்கு சுதா ஒரு காரில் வந்ததாக கூறப்படும் நிலையில் அவர் வந்த கார் யாருடையது? அந்த காரை ஓட்டி வந்தவருக்கும் சுதாவுக்கும் என்ன சம்மந்தம்? போலி நகைகளை அடகு வைத்ததன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? ராஜாராமின் கடையில் போலி நகைகளை அடகு வைத்து சுதா பணம் வாங்கி ஏமாற்றியது போன்று வேறு கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் வாங்கி உள்ளாரா? பெரிய வழிப்பறி கும்பல் யாரும் சுதாவை இயக்கினார்களா? என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.இதில், ஏதாவது ஒரு கேள்விக்காவது விடை கிடைத்தால் தான் இந்த மோசடியின் பின்னணி குறித்து முழு விவரம் தெரியவரும்.இதுஒருபுறம் இருந்தாலும், மோசடியில் ஈடுபட்ட சுதாவை சட்டப்படி போலீசில் ஒப்படைக்காமல் ராஜாராம் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்தே கொன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் பலரும் கூறி வருகின்றனர்.