கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறில் மூதாட்டியை அவரது கொழுந்தன் குடும்பமே மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக சொல்லப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டி மரத்தில் கட்டி வைக்கப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து, மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.பிரியமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பெரியம்மாவை, மரத்தில் கட்டிப்போட்டு கதறவிட்ட குற்றத்தில் சிறைப்பறவையானார் கொழுந்தனின் மகன். போதாக்குறைக்கு பஞ்சாயத்து பேச வந்த பாஜக பிரமுகரையும் பொளந்து கட்டிய இவரது மனைவியும் கட்டிய பாவத்திற்கு கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஆட்டுபாலன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் உண்ணாமலை. கணவரை இழந்து இரண்டு மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வரும் இவருக்கும், இவரது கொழுந்தனின் மகன் குமாருக்கும் இடையே பல ஆண்டுகளாக தீராத நிலப்பிரச்னை இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.சுமார் 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சரிபாதியாக பிரித்து அண்ணன் தம்பிகளான உண்ணாமலை கணவரும், குமாரின் தந்தையும் அனுபவித்து வந்த நிலையில், இருவரது மறைவுக்கு பின் சொத்து தகராறு பூதாகரமாக வெடித்துள்ளது. குமார் ஆண்டு அனுபவிக்கும் 4 ஏக்கர் நிலமும், தங்களுக்கு தான் சொந்தம் என மூதாட்டி உண்ணாமலை பல நாட்களாக போர்க்கொடி உயர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் தான், குமார் தனக்கு பாத்தியப்பட்ட நிலத்தை உழுது வேளாண் பணிகளை தொடங்கியதாக தெரிகிறது. இதையறிந்த உண்ணாமலை நிலத்தை உழுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டதோடு, மகனின் நண்பரான பாஜக பிரமுகர் அண்ணாமலையையும் பஞ்சாயத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.பங்காளி என்ற முறையில் மூதாட்டி உண்ணாமலை சண்டைபோடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. நடுவில் நீ யார்? என்ற தொனியில் அண்ணாமலையை புரட்டி போட்டு அடித்திருக்கிறார் குமாரின் மனைவி கல்பனா.இரு குடும்பத்திற்கு இடையேயான பிரச்னையை பஞ்சாயத்து பேசி முடித்து காசு பார்க்கலாம் என்ற நப்பாசையில் வந்த பாஜக பிரமுகருக்கு முகம் பஞ்சரானது தான் மிச்சம். இந்நிலையில், மூதாட்டி உண்ணாமலையை அலேக்காக தூக்கி மரத்தில் கட்டிவைத்த குமாரின் மனைவி கல்பனா, அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.சொந்த பெரியம்மாவை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கையோடு குமார் டிராக்டரை ஆன்செய்து அவர் கண்முன்பே நிலத்தை உழுது வேளாண் பணிகளை மேற்கொண்டார். இதுகுறித்து உண்ணாமலையின் மருமகள் போலீசுக்கு தகவல் கொடுத்ததை அறிந்து குமார், அவரது மனைவி கல்பனா, மச்சான் பிரபாகரன் உள்ளிட்டோர் அங்கிருந்து நடையை கட்டியதாக சொல்லப்படுகிறது.மூதாட்டியை மரத்தில் கட்டிவைத்த வீடியோ வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி குமார், கல்பனா, பிரபாகரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.