கேரளாவிலிருந்து தப்பியோடி வந்த ரவுடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள மலை குன்றில் பதுங்கியதாக வந்த தகவலையடுத்து, அவரை பிடிக்க சென்ற சிறப்பு படை காவலர்கள் பாறையின் மேல்பகுதியில் இரவு முழுக்க சிக்கிக்கொண்டனர். மழை கொட்டித் தீர்த்ததால், பாறை வழுக்கிய நிலையில், கீழே இறங்க முடியாமல் தவித்த காவலர்களை, 10 மணிநேரம் போராடி தீயணைப்புத்துறையினர் மீட்டுக்கொண்டு வந்தனர். பல ஆண்டுகளாக, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த ரவுடியை பிடிக்க சென்ற காவலர்கள், மலை உச்சியில் சிக்கிக்கொண்ட நிலையில், விடிய விடிய அன்னம் தண்ணீர் இல்லாமல் தவியாய் தவித்தனர்.தென்காசி மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, கடந்த 9 ஆண்டுகளாக தமிழக போலீசாரை சுத்தலில் விட்டு தலைமறைவாக இருந்து வந்திருக்கிறார். இவர், தென்காசி மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு ரவுடியாக வலம் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இவர் கேரள மாநிலத்திலும், நகைகளை திருடி கைவரிசை காட்டிய வழக்கில் சிக்கியதையடுத்து அம்மாநில போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அது தொடர்பாக, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையிலிருந்து அழைத்து செல்லப்பட்ட நிலையில், போலீசார் அசந்த நேரம் பார்த்து தப்பியோடிவிட்டார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், கேரள போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்ததுடன், பாலமுருகனை தேட கூறினர். இந்நிலையில், அவர் கடையம் பகுதியில் உள்ள மலைக்குன்றில் பதுங்கியிருப்பதாக தென்காசி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தென்காசி மாவட்ட சிறப்பு படை காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர், மலையில் பதுங்கியுள்ள ரவுடியை பிடிக்க சென்றனர். மலையில் ஏறிய சிறப்பு படை காவலர்கள், ரவுடியை தேடி கொண்டிருக்கையிலேயே, மழை பெய்தது. அப்போது, சில காவலர்கள் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய நிலையில் பாறையில் ஏறி சென்ற 5 காவலர்கள் மட்டும் சிக்கிக்கொண்டனர். பாறைகள் மழைநீரில் நனைந்ததால் கால் வைத்தாலே வழுக்கியதால் பிடிப்பான இடத்தில் பதுங்கி கொண்டனர். அப்போது, இறங்க முடியாமல் சிக்கி தவித்த காவலர்கள் தங்களை காப்பற்ற கூறி, சத்தமிட்ட நிலையில் ரவுடியை தேடும் பணியை நிறுத்திவிட்டு அவர்களை மீட்கும் பணியில் பிற காவலர்கள் ஈடுபட்டனர். அதில் மூன்று காவலர்களை போராடி பிற காவலர்கள் மீட்கவே, பாறையின் நடுப்பகுதியில் இறங்க முடியாத அளவுக்கு இரு காவலர்கள் மட்டும் சிக்கியிருந்தனர். இதனால் காவலர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.800 அடி உயரத்தில் சிக்கி கொண்ட காவலர்களை இரவு முழுக்க 10 மணி நேரம் போராடி, காலை 6 மணிக்கு தீயணைப்புத்துறையினர் மீட்டனர். கயிறை மரத்தில் கட்டிக் கொண்டு பாறையில் சிக்கிய காவலர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த ரவுடியை டிரோன் உதவியுடன் தேடும் பணியை காவலர்கள் முடுக்கி விட்டனர்.