விருதுநகர் அருகே விடலை பருவ வயதை சேர்ந்த 4 பேர் ஒன்று சேர்ந்து வயல்காட்டில் வைத்து 2 பிஞ்சு சிறுவர்களை கொடூரமாக ஈவு இரக்கமே இல்லாமல் தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பதற வைத்து உள்ளது. தரதரவென இழுத்து வந்தும், காலால் எட்டி உதைத்தும் நான்கு பேரும் நடந்து கொண்ட விதம் நடுநடுங்க வைத்த நிலையில், தாக்குதலுக்குள்ளான சிறுவர்களின் பெற்றோரை போலீஸ் புகார் கொடுக்க விடாமல் உள்ளூர் அரசியல் பிரமுகர் கட்டப்பஞ்சாயத்து பேசியதாக வெளியான தகவலும் அதிர வைத்துள்ளது.விருதுநகர் மாவட்டம், சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன், 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் 2 பேர், 12ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன் என 4 பேரும் நண்பர்கள் என்ற நிலையில், நான்கு பேரும் சேர்ந்து மறைவான இடத்தில் பீடி புகைத்ததாகக் கூறப்படுகிறது.படிக்கிற வயதில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை பார்த்த, அதே ஊரை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் வீட்டில் சொல்லிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.பள்ளி மாணவர்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்து பொறுப்பாக வந்து வீட்டில் சொன்ன 6ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனுக்கு கிடைத்திருக்கும் தண்டனை தான் இந்த கொடூர தாக்குதல்.4 பள்ளி மாணவர்களும், தங்களை மாஸ்ஸாக நினைத்துக் கொண்டு மிதப்பில் பிஞ்சு சிறுவர்களை ஆள் ஆரவாரம் இல்லாத வயல்காட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், 4 பேரும் சேர்ந்து 2 சிறுவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். சிறுவர்கள் கதறி கதறி அழுது கெஞ்சியும் கூட மனமிரங்காத அந்த பள்ளி மாணவர்கள் காலால் எட்டி உதைத்து தாக்கியது நெஞ்சை உறைய வைத்தது.சினிமாவில் வரும் சண்டை காட்சி போல சிறுவர்கள் நிலைகுலைந்து, மூர்ச்சையாகும் அளவுக்கு ஆள் ஆளுக்கு அந்த பள்ளி மாணவர்கள் தாக்கியது கண்களை குளமாக வைத்தது. அடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த சிறுவர்களை பீடி புகைக்க சொல்லி வற்புறுத்தியிருக்கிறது அந்த நான்கு விடலை பருவ பள்ளி மாணவ கும்பல். இதில் கொடுமை என்னவென்றால் தாக்குதல் நடத்தியதில் ஒரு மாணவன் மாலை வேறு அணிந்திருந்தான் என்பது தான். சிறுவர்களை தாக்கியதை அந்த பள்ளி மாணவ கும்பலே வீடியோ எடுத்து வைத்திருக்க, அந்த வீடியோ லீக் ஆகி அவர்களுக்கே சிக்கலை தேடி தந்திருக்கிறது. தாக்குதலுக்கு ஆளான சிறுவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்த நிலையில், ஒண்டிபுலி நாயக்கனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரின் மருமகனான அரசியல் பிரமுகர் குமார் என்பவர் கட்டப்பஞ்சாயத்து பேசி புகார் கொடுக்க விடாமல் தடுத்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.அடித்த அடியில் சிறுவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? என்பதோடு, இவ்வளவு கொடூர தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்களை அப்படியே எப்படி விட்டு விட முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ஆகையால், உடனடியாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்களும் மைனர் தான் என்ற நிலையில், இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு குரூரமான புத்தி எப்படி வந்தது என அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.வளரும் சூழல் தொடங்கி பெற்றோரின் குணாதிசயங்களை பொறுத்து தான் குழந்தைகளின் குணாதிசயங்களும் வரும் என்ற மனநல மருத்துவர், வீட்டில் பெற்றோர் ஒருவருக்கொருவர் திட்டிக் கொள்வது, சண்டை போட்டுக் கொள்வது மாதிரியான சூழலை பார்த்து வளரும் குழந்தைகளும் இப்படி தான் அடாவடித்தனமாக நடந்து கொள்வார்கள் என்றார்.அதுமட்டுமல்லாமல், தற்போதுள்ள பிள்ளைகள் விளையாட்டு, சினிமா படங்களும் கூட சிறுவர்களின் குணாதிசயங்களை தீர்மானிக்கிறது என்பதால், ரத்தம், அடிதடி என பார்த்து பார்த்து வளரும் சிறுவர்களும் அதே பாணியை கையிலெடுத்து ஹீரோயிசம் காட்டுவதாக நினைத்து இப்படி நடந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார் மன நல மருத்துவர். இதற்கெல்லாம் முக்கிய முழு காரணமே, பெற்றோர் தரப்பில் இருந்து போதிய அக்கறை செலுத்தாதது தான்.எது தவறு, எது சரி என புரியும்படியாக புத்தியில் உரைக்கும் படி சொல்லிக் கொடுத்து வளர்க்காமல், குழந்தைகள் என்ன செய்தாலும் கொண்டாடி தீர்க்கும் பெற்றோர் தான் இந்த மாதிரியான சம்பவங்களுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.குழந்தையை பெற்றெடுப்பதை தாண்டி குழந்தையை வளர்ப்பதும் மிக முக்கிய பொறுப்பு என்பதை உணர்ந்து பெற்றோர் செயல்பட வேண்டும்.முளையிலேயே கிள்ளி எறியாமல் குழந்தைகளை தாந்தோன்றித்தனமாக வளர்த்து விட்டால் கடைசியில் சம்பந்தப்பட்ட பெற்றோரை நோக்கி ஒட்டு மொத்த சமூகமே கேள்வி எழுப்பும் என்பதே நிதர்சனம்.