திருவள்ளூர் மாவட்டத்தில், விடாது கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து குளம்போல் காட்சியளிப்பதோடு விவசாய நிலங்களும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. வீடுகளைவிட்டு மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், உணவுகூட தயார் செய்ய முடியாமலும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அருகே கழிவுநீருடன் கலந்த மழை நீர், தாமரை ஏரி வழியாக திறந்து விடப்பட்டது. இந்த நீர் தேக்கமடைந்து கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வயல்களில் தண்ணீர் குளம்போல தேங்கி உள்ளது. முறையாக கால்வாய்களை தூர் வாராததால் தான் உபரிநீரானது வெளியேற முடியாமல் விளை நிலங்களுக்குள் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதேபோல், பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.அயப்பாக்கம் சுமங்கலி கார்டன், அம்பத்தூர் கூட்டுறவு நகர், பெரியகோலடி சாலை, பொன் ராஜகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 3 அடி அளவிற்கு மழைநீர் ஆறாக ஓடுகிறது. முறையான வடிகால் அமைப்பு ஏற்படுத்தாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.. இதேபோல், செங்குன்றம் அருகே மல்லிமா நகர் பகுதியில் கும்மனூர் ஏரி நிரம்பியதால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. சமையலறைக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் உணவுகூட தயார் செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனர்.பூந்தமல்லி அருகே கண்ணபாளையம் ஏரி நிரம்பியதால் பாணவேடு தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விச்சூர் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீரால், எழில் நகர் பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.