புதுச்சேரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்துக்கு, ஒருவர் துப்பாக்கியுடன் வந்ததால் போலீசாரும், தவெகவினரும் திடுக்கிட்டனர். இதனை தொடர்ந்து, துப்பாக்கியுடன் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தவெக மாவட்ட செயலாளரின் தனி பாதுகாவலர் என்பது தெரிய வந்த நிலையில், அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.கரூர் சம்பவத்துக்கு பின், எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த தவெக பொதுக்கூட்டத்துக்குள் ஒருவர் துப்பாக்கியும் கையுமாக வந்தது, காவலர்களையே ஒரு கணம் திகைக்க வைத்தது.கரூர் பிரச்சாரத்துக்கு பின் புதுச்சேரியில் தவெக சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கரூர் பிரச்சார கூட்ட நெரிசலால் கற்றுக்கொண்ட பாடத்தினால், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க, காவல்துறை சார்பிலும் மற்றும் தவெக சார்பிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதுச்சேரி, உப்பளத்தில் உள்ள ஹெலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் கூட்டத்துக்கு வருவோர்களை சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். மைதானத்துக்கு உள்ளே வந்தும் பிரதான நுழைவு வாயிலில் ஒருவர் துப்பாக்கியுடன் சிக்கினார். துப்பாக்கியை கண்டு அதிர்ந்த போலீசார், அவரை துருவி துருவி விசாரித்தனர். அவர் துப்பாக்கியுடன் வந்ததை அறிந்த செய்தியாளர்களும் அந்நபரை சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்தனர். இதனிடையே சிவகங்கை மாவட்டத்திலிருந்து வந்திருப்பதாகவும், துப்பாக்கிக்கு லைசென்ஸ் வைத்திருப்பதாகவும் அவர், போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்துக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லாத பட்சத்தில், எதற்காக வந்தீர்? என செய்தியாளர்கள் கேள்வி கேட்க, எவருக்கோ செல்போனில் கால் செய்து போலீசாரிடம் தந்தது, குழப்பத்தை தான் ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், சிவகங்கை கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் பிரபுவின் தனி பாதுகாவலர் என்றும், அவரின் பாதுகாப்பிற்காக வந்ததாகவும் கூறினார். 25 ஆண்டுகளாக CRPF-யில் பணியாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனிடையே பொதுக்கூட்ட நுழைவாயில் அருகே ஏற்பாட்டை கவனித்துக்கொண்டிருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடம், துப்பாக்கியுடன் வந்த நபர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்க, பதிலளிக்காமல் நழுவிச் சென்றார். இது போதாதென செய்தியாளர் நீட்டிய மைக்கையும் அவரது ஆதரவாளர் தள்ளி விடவே, விருட்டென உள்ளே சென்றார்.