கோவை அருகே செயல்பட்டு வரும் கல்குவாரிகளால், தாங்கள் வாழவே முடியாத நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள் பூர்வீக வீட்டைவிட்டு வேறு எங்கு தான் செல்வது? என கேள்வி எழுப்பி உள்ளனர். வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், தலைமீது கற்கள் விழுவதாகவும் கூறி உள்ள மக்கள், அதிகாரிகள் ஏறெடுத்து பார்த்தால் மட்டும்தான், தங்களின் வாழ்வாதாரத்திற்கே விடை கிடைக்கும் என்றும், கவலை தெரிவித்துள்ளனர்.இஷ்டத்திற்கு குடைந்தெடுக்கப்பட்டு கிடக்கும் இந்த கல்குவாரியால், தனது கண்கள் மட்டுமா பாதிக்கப்பட்டது? தளதளவென வளர்ந்து நிற்க வேண்டிய இந்த வாழைக் கன்றுகளும் தான் வடிவிழந்து நிற்கிறது என்பதே விவசாயிகளின் தாள முடியாத வருத்தம். கல் குவாரிகளால் விவசாயிகள் அச்சம்கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள இரும்பறை கிராமத்தில் ஓதிமலை ஆண்டவர் மற்றும் சன்ஃபிளவர் என்ற 2 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளை சுற்றி தான் மாஸ்திபாளையம், பட்டக்காரம்பாளையம், இட்டிடேபாளையம், பாசக்குட்டை, மொக்கையூர், தாசக்காளியூர், சண்முகாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள், அனைவரும் இந்த கல்குவாரியை கடந்துதான் எங்கு வேண்டுமானலும் சென்று வரவேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படி, செல்லும்போது அவர்கள் படும் இன்னல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல விரல்விட்டு எண்ணிக்கொண்டே போகலாம்.. அதிலும், இரும்பறை கிராமத்தில் வசிக்கும் மக்களின் வேதனை தான் ஆறாத ரணமாக உள்ளது. கல்குவாரியில் இருந்து 250 மீட்டர் தூரத்தில் உள்ள தனது வீட்டில் வாழும் விவசாயி ரமேஷ் குமார், கல்குவாரிகளில் இருந்து பாறைகளை உடைத்து, அதனை அரைக்கும் போது புழுதி வெளியேறி சுவாசப் பிரச்சனை ஏற்படுவதாகவும், விவசாய நிலங்களில் பாறைப்பொடிகள் படர்ந்து பயிர்களையே நாசம் செய்வதாகவும் வருத்தம் தெரிவித்தார்.வாழ்வாதாரத்திற்கு பதில்தான் என்ன? காவல்துறை, மாவட்ட ஆட்சியர், கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என அத்தனை அதிகாரிகளிடமும் மனுவுக்கு மேல் மனு வழங்கி அந்த மனுக்களும் பண்டலாக தான் சேர்ந்துள்ளதே தவிர, தங்கள் மனக்குமுறலுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும், மாற்றாக மிரட்டல் தான் தொடர்ந்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார் ரமேஷ் குமார். மேலும், பூர்வீக வீட்டை விட்டுவிட்டு வேறு எங்கு செல்வது? விவசாயத்தை விட்டுவிட்டு எங்கு போவது? கல்குவாரியால் பாழான நீர்வழிப்பாதைக்கு என்னதான் தீர்வு? விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பதில் தான் என்ன? என கேள்வி எழுப்பிய அவர், எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம், எந்த சேனலில் வேண்டுமானாலும் பேட்டி கொடுக்கலாம், நாங்கள் யாரை பார்க்க வேண்டுமோ? அவர்களை பார்த்துக் கொள்கிறோம் என திமிர்பேச்சு பேசும் கல்குவாரி உரிமையாளர்களை யார் தான் தட்டிக்கேட்பது? என வேதனை தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய ரமேஷ்குமாரின் மனைவி பவளக்கொடி, இரவு நேரத்தில் கல்குவாரியில் இருந்து வரும் சத்தத்தால் தனது பிள்ளைகள் படிப்பதற்குகூட சிரமப்படுகிறார்கள் எனவும் தங்களை வீட்டைவிட்டு செல்லுமாறு மிரட்டல் வருவதாகவும் புகார் கூறினார். மூச்சு விடுவதற்குகூட சிரமம்விவசாயி தங்கராஜ் பேசியபோது, கல்குவாரியில் இருந்து விழும் கற்களால் பலமுறை விபத்து நடந்துள்ளதாகவும், அதுகுறித்து கல்குவாரியில் உள்ளவர்களிடம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்வதாக கூறினார்.. அவர்கள் தான் அப்படி என்றால் போலீசாரோ, நீங்கள் தான் செய்தி சேனலுக்கு பேட்டி கொடுக்கிற ஆட்களா? என ஏளனம் செய்வதாகவும் கவலைப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய பெண் விவசாயி கலைவாணி, எந்நேரம் வேண்டுமானாலும் கல்குவாரியில் இருந்து கற்கள் தெறித்து தலையில் விழுவதாகவும், மூச்சுவிடுவதற்குகூட சிரமமாக இருப்பதாகவும் கூறினார்.கல்குவாரியை இயங்க விடாமல் தடுக்க வேண்டும்கல்குவாரியில் இருந்து பறக்கும் பொடிதான் கண்கள் முழுக்க நிறைவதாக கூறிய விவசாயி வெங்கட்ராமன், பச்சை பசேலென்று இருக்க வேண்டிய வாழை இலைகள் முழுக்க பொட்டு பொட்டாக பாறைப்பொடி படர்ந்து சாம்பல் நிறத்தில் காட்சியளிப்பதாக வேதனைபட்டார்.இப்படி தங்கள் மனக்குமுறல்களை கொட்டி உள்ள விவசாயிகள், கல்குவாரியை இயங்க விடாமல் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏறெடுத்து பார்ப்பார்களா? அல்லது அவர்கள் குற்றம் சாட்டுவதுபோல கண்டுகொள்ள மாட்டார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் கதிர்வேல் கேமராமேன் ராஜேஷ்.இதையும் பாருங்கள் - 2 முறை விலை உயர்ந்த ஆபரண தங்கம்