நாமக்கல் மாவட்டம், சமயசங்கிலி பகுதியில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான கரும்பு கொள்முதலில், அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி விவசாயிகள் சாலையில் படுத்து உருண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 4000 கரும்புகளுக்கு 400 கரும்புகள் வீதம், அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் பகீர் புகார் வெளியாகியுள்ளது.வருடம் 365 நாளும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன இம்மக்களை, லஞ்சம் என்ற பெயரில் வாட்டி வதைக்கும் அதிகாரிகளை என்ன சொல்வது?பொங்கல் திருநாள் கொண்டாட்டத்திற்காக அரசு சார்பில், சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், சமயசங்கிலியை சேர்ந்த விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டே அதிகாரிகள் இலவச கரும்புகளை லஞ்சமாக கேட்டு தொந்தரவு செய்வதாக, இதே கிராம மக்கள் தான், அதிகாரிகளின் அட்டூழியத்தை அம்பலப்படுத்தியிருந்தனர்.இந்த வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டே அதிகாரிகள் திட்டமிட்டு இந்த முறை சமயசங்கிலி மக்களை புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நாமக்கலிலேயே சமயசங்கிலியில் தான் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுவரும் நிலையில், இந்த முறை இல்லாத பொல்லாத சாக்கு போக்குகளை சொல்லி, கரும்புகளை கொள்முதல் செய்ய மறுப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு, வசதி படைத்தவர்களிடம் அதிகளவில் கரும்புகளை கொள்முதல் செய்யும் அதிகாரிகள், தங்களிடம் மட்டும் கொள்முதல் செய்யவில்லை என குமுறுகின்றனர்.இந்த முறை கரும்பு கொள்முதலுக்கு தாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்தபோதே மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தலை வழங்கிய போதிலும், கரும்பு கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பதாக எழுந்திருக்கும் புகார், பகீர் கிளப்பியுள்ளது. 4 ஆயிரம் கரும்புகளுக்கு 400 கரும்புகள் வீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் நிர்பந்திப்பதாக கூறியதோடு அரசு நிர்ணயித்த 38 ரூபாயில் 26 ரூபாய் மட்டுமே அதிகாரிகள் விடுவிப்பதாக குற்றம் சாட்டி விவசாயிகள் சாலையிலேயே படுத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒருகட்டத்தில், லஞ்சமாக கரும்பு கொடுப்பதற்கு ஒப்புக் கொண்ட போதிலும் தங்களது கரும்புகளை வேண்டுமென்றே கொள்முதல் செய்யாமல் அலைக்கழிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 7 அடி உயரமுள்ள கரும்புகளை புறக்கணித்துவிட்டு அளவில் சிறியதாக உள்ள கரும்புகளை வசதி படைத்தவர்களிடம் கொள்முதல் செய்யப்படுவதாக, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.இந்நிலையில், வேளாண்குடி மக்களிடம் அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வருடம் தோறும் தலைதூக்கும் கமிஷன் பிரச்னையை அரசு தலையிட்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் தங்கமணி.