நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட மொஞ்சனூர் பகுதியில் குவாரி மாஃபியாக்கள் அதிகாரிகளின் துணையோடு போலி ஆவணங்களை தயார் செய்து, குவாரி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மக்களை காக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமே குவாரி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக வேதனையுடன் கூறிய மக்கள், கிராமத்தை விட்டே வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக புலம்பி தள்ளுகின்றனர்.இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தின் அடியில் குவாரி அமைத்து கனிமவள சுரண்டலில் ஈடுபட துடிக்கும் கும்பலை தடுக்க முடியாமல் கிராம மக்கள் விழி பிதுங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களை காக்க வேண்டிய அரசு அதிகாரிகளே கனிம வள கும்பலிடம் வெகுமதி பெற்றுக் கொண்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு கனிமவள சுரண்டலுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறும் கிராம மக்களின் புலம்பலை என்னவென்று சொல்வது?நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட மொஞ்சனூர் கிராமத்தில் சுமார் 450 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு அருகே கோங்கரைப்பாறை எனும் இடத்தில் அலவாய் மலை அடிவாரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.41.50 லட்சம் மதிப்பில் கல்குவாரி அமைக்க, முத்துவேல் என்பவரது மனைவி மஞ்சுவுக்கு ஒப்பந்த அடிப்படையில் கனிம வளத்துறை அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மொஞ்சனூர் கிராம மக்கள் குவாரி செயல்பட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 5 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தியும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் கிராம மக்கள், குவாரியை செயல்படாமல் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. போராட்டம் செய்யும் மக்களின் மீது வேண்டுமென்றே PCR வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டுவதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும், மக்கள் இருப்பிடங்களுக்கு 300 மீட்டர் தள்ளிதான் குவாரி அமைக்க வேண்டும் என விதி இருப்பதாகவும், குவாரியை சுற்றி 300 மீட்டருக்குள்ளாகவே வீடுகள், கோயில் குட்டை, நீர் வழிப்பாதை, ஆறு, வீடுகள், 35 கிணறுகள், 60 ஆழ்துளை கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளதாக மொஞ்சனூர் கிராம மக்கள் கூறுகின்றனர். குவாரி செயல்படும் பட்சத்தில் நிலத்தடி நீர் மாசு மற்றும் காற்று மாசு ஏற்பட்டு வாழ தகுதியில்லாத இடமாக மாறும் என மக்கள் புலம்புகின்றனர்.ஆனால், அதிகாரிகளோ குவாரி அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தை சுற்றி 300 மீட்டருக்குள் மக்கள் வசிப்பிடம், கிணறு, குளம், ஆறுகள் இல்லையென போலியான ஆவணங்களை தயார் செய்து கல்குவாரி மாஃபியா-க்களுக்கு துணை போவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.குவாரி உரிமையாளர்கள் தங்களது பணியாட்களை வைத்து உள்ளூரில் சாதி பிரச்னையை உண்டாக்கி, கிராம மக்களை அகற்ற முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள், மாவட்ட நிர்வாகமே குவாரி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக வேதனை தெரிவித்தனர்அதிகாரிகள் போலியாக ஆவணங்களை தயார் செய்து கல்குவாரிக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என நிரூபிக்க தயாரானால், மேல் முறையீடு செய்யலாம் என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மொஞ்சனூர் கிராம மக்களிடம் கேட்டுக் கொண்டார்.குவாரி அமையவுள்ள 300 மீட்டர் பகுதிக்குள் குடியிருப்புகள், கிணறுகள், விவசாய நிலப்பரப்பு உள்ளதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக கூறும் மொஞ்சனூர் மக்கள், அவ்வாறு இல்லையென மாவட்ட நிர்வாகம் நிரூபித்தால் தங்களது அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து விட்டு, கிராமத்தை விட்டே வெளியேற தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டபோராட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி, குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மொஞ்சனூர் கிராம மக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.