சிவகாசி அருகே அதிகாலையில் வாயையும், கண்களையும் பொத்தி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட காக்கிச்சட்டை கொள்ளையனை 70 வயது மூதாட்டி ஒரு சொம்பு தண்ணீரால் விரட்டியடித்து வீரசாகசம் புரிந்துள்ளார். மூதாட்டி கத்தி கூச்சலிட்டதும் உஷாரான கொள்ளையன்,பொதுமக்களிடம் சிக்கினால் சிதைத்து விடுவார்கள் என்றெண்ணி, குடுகுடுவென குள்ளநரிபோல் ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.முறத்தால் புலியை விரட்டிய வீரமங்கை குறித்து, சங்க கால இலக்கியங்களில் படித்து மட்டும் தான் இருப்போம். அதனை நடைமுறையில் பார்க்க சாத்தியமில்லை. ஆனால், 70 வயதான வீரமங்கை, ஒரு சொம்பு தண்ணீரால் ஒரு கொள்ளையனையே விரட்டி, சங்க கால இலக்கியத்தையே மிஞ்சிவிட்டார்.விருதுநகர் மாவட்டம், சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியை சேர்ந்தவர் மூதாட்டி மகேஸ்வரி. இவர் தினமும் அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் முற்றத்தில் தண்ணீர் தெளிப்பது வழக்கம். இதன்படி, காலை 4.30 மணியளவில் கண்முழித்த மகேஸ்வரி, ஒரு சொம்பு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிவிட்டு, முற்றத்தில் தண்ணீர் தெளிக்கலாம் என்பதற்காக தயாராக நின்றார். இந்நிலையில் துண்டால் தலை மற்றும் முகத்தை முழுமையாக மறைத்து, கண்கள் மட்டும் வெளிய தெரியும்படி முகமூடி அணிந்துகொண்டு திண்ணையில் சைலண்ட்டாக அமர்ந்திருந்த ஒரு காக்கிச்சட்டை ஆசாமி, மகேஸ்வரியின் பின்னால் சென்று அவரது வாயையும் கண்களையும் பொத்தி நகைகளை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால், உஷாரான மூதாட்டி, தனது கையில் இருந்த ஒரு சொம்பு தண்ணீரை மர்ம ஆசாமியின் மேல் ஊற்றியதோடு, கத்தி கூச்சலிட்டுள்ளார்.மூதாட்டி ஆசிட் போன்ற ரசாயனம் ஏதாவது ஊற்றுகிறாரோ என, மர்ம ஆசாமி அச்சமடைந்தாரோ என்னவோ, ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றியதும் திருட்டு பிரசாசஸையே கைவிட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.கூடவே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டதாலும், மர்ம ஆசாமி அங்கிருந்து எஸ்கேப் ஆனார். பொதுமக்கள் கூடினால் தர்மஅடி நிச்சயம் என மர்ம ஆசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கணக்கு போட்டது போன்றுதான் இருந்தது அவர் குடுகுடுவென குள்ளநரிபோல் ஓடிய ஓட்டம்.கொள்ளையனை விரட்டிப் பிடிக்கும் அளவுக்கு மூதாட்டிக்கு சக்தி இல்லாத நிலையில் தனது உறவினர்களை எழுப்பி நடந்த விவரத்தை கூறி உள்ளார். அதன்பிறகு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர் மூதாட்டியின் உறவினர்கள்.அதில், தெருவில் உள்ள நாய்களை கல்லால் அடித்து விரட்டிக்கொண்டே சைக்களில் வந்த மர்ம ஆசாமி, மூதாட்டியின் வீட்டின் முன்பு 1 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.இதையடுத்து, சிசிடிவி கேமரா ஆதராத்தோடு சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு களவாணித்தனத்தில் ஈடுபட்ட நபர் யார்? அவர் மூதாட்டியை தினமும் நோட்டமிட்டு இந்த சம்பவத்தை செய்தாரா? அந்த மர்ம ஆசாமி அதே பகுதியை சேர்ந்தவரா? அல்லது வேறு பகுதியை சேர்ந்தவரா? மூதாட்டியிடம் மட்டும் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? அல்லது இதேபோன்று பலரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணையில் இறங்கி உள்ளனர்.இதுஒருபுறமிருக்க, தங்கள் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் வயதானவர்கள் அதிகம் இருக்கும் இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் மூதாட்டி மகேஸ்வரியின் மருமகள் பொற்கொடி கோரிக்கை விடுத்துள்ளார்.