தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என்பதை சட்டவிரோதமாக பரிசோதித்து தெரிந்து கொண்ட கணவர், மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றதில் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆண் வாரிசுக்கு ஆசைப்பட்டு, கட்டின மனைவியையும், கருவிலிருந்த குழந்தையையும் அழித்த படுபாதகன். வேண்டாத வேலையில் ஈடுபட்ட பிறகு வேண்டியது கிடைக்கவில்லை என வேண்டுமென்றே ஆபத்தென தெரிந்தும் இவர் செய்த செயல்தான் இரு உயிர்களை பறித்திருக்கிறது.தருமபுரி மாவட்டம், பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இத்தம்பதிக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் வாரிசுக்கு ஆசைப்பட்டு மூன்றாவதாக கருத்தரித்ததாக சொல்லப்படுகிறது. கோயில் கோயிலாய் படியேறி, ஆண் குழந்தைக்காக தவமிருந்த கண்ணன், திடீரென ஒருநாள் தனது மனைவி படியிலிருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி பகீர் கிளப்பியிருக்கிறார்.மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ரம்யா உயிரிழந்ததாக சொல்லப்பட்டதும் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததற்கான ஒரு காயமும் தென்படாத நிலையில், எப்படி ரம்யா உயிரிழந்திருப்பார் என அடுத்த சில நாட்களாகவே அக்கம்பக்கத்தினர் சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர். இதையடுத்தே ரம்யாவின் உறவினர்களுக்கு சந்தேகம் வந்து போலீசில் புகாரளித்தனர். வழக்கை கையிலெடுத்த போலீசார், கண்ணனை துருவி துருவி விசாரித்த போது தான், கிணறு தோண்ட பூதம் கிளம்பியதை போல் ஒவ்வொரு உண்மையும் வெளிப்பட்டிருக்கிறது.ரம்யாவின் வயிற்றில் உள்ள கரு ஆணா, பெண்ணா என்பதனை கண்டறிய பணம் கொடுத்து சட்டவிரோதமாக தனியார் ஸ்கேன் செண்டரில் பரிசோதித்துள்ளார். அப்போது தான், ரம்யாவின் வயிற்றில் வளருவது பெண்குழந்தை என அறிந்த கண்ணன், செவிலியர் சுகன்யா மற்றும் புரோக்கர் வனிதா ஆகியோர் துணையோடு ரம்யாவுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைப்பு செய்துள்ளனர். எதிர்பாராவிதமாக ரம்யாவுக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது. ரம்யா மரணத்திற்கான காரணம் வெளியில் தெரிந்தால் தாம் சிறைக்கு செல்ல நேரிடும் என்ற பயத்தில் ரம்யா தவறி விழுந்து உயிரிழந்ததாக பொய் பரப்பியிருக்கிறார். இந்நிலையில், கண்ணனை கைது செய்த காவல்துறையினர், அவருக்கு உதவிகரமாக இருந்த செவிலியர் சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகியோரையும் கைது செய்தனர்.