காஞ்சிபுரத்தில், கதவு இடுக்கில் சிக்கி கை விரலில் காயமடைந்த இரண்டு வயது பெண் குழந்தை, செங்கல்பட்டு ரெங்கா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால், குழந்தை உயிரிழந்ததாக புகார் கூறும் பெற்றோர், ரமணா பட பாணியில் குழந்தை உயிருடன் இருப்பது போல் நாடகமாடி நம்பவைத்து மருத்துவர்கள் ஏமாற்றியதாக கூறி, அதிர வைத்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம், மெய்யூர் ஓடை கிராமத்தை சேர்ந்த லோகநாதன் மற்றும் ஜெயஸ்ரீ தம்பதிக்கு தோஷிக் டோனி என்ற மகனும்,சாருமதி என்ற இரண்டு வயது மகளும் இருந்த நிலையில், சனிக்கிழமையன்று வழக்கம்போல குழந்தை சாருமதி விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் கதவுக்கு இடையில் கை விரல் சிக்கி காயமடைந்ததாக தெரிகிறது.காயமடைந்த குழந்தை சாருமதியை அவரது பெற்றோர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரங்கா மருத்துவமனையில் சனிக்கிழமையன்று அனுமதித்துள்ளனர். பின்னர் ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 மணியளவில் மருத்துவர்கள் சாருமதிக்கு மயக்க ஊசி செலுத்தி கை விரலில் ஆபரேசன் செய்ததாக தெரிகிறது. பின்னர், சாருமதி சுயநினைவை இழந்ததாகவும், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றம் வேண்டும் எனவும் மருத்துவர்கள் சாருமதியின் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குழந்தைக்கு HEAVY DOSE மயக்க ஊசி செலுத்தி ஆபரேசன் செய்ததை, குழந்தை சுயநினைவு இழந்த பின்னரே மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மதியம் சுமார் 2 மணியளவில் சாருமதி, ரங்கா மருத்துவமனையில் இருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நள்ளிரவு 1 மணியளவில் குழந்தை இறந்து விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். குழந்தை இறந்த சம்பவம் கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளான பெற்றோர், செய்வதறியாது தவித்தனர்.ரங்கா மருத்துவமனையில் மருத்துவர்கள் HEAVY DOSE மயக்க ஊசி செலுத்தி குழந்தைக்கு ஆபரேசன் செய்ததால் குழந்தை அங்கேயே இறந்ததாகவும், குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தி உயிரோடு இருப்பதாக கூறி அரசு மருத்துவமனைக்கு மாற்றியதாகவும் சாருமதியின் தந்தை லோகநாதன் புகார் கூறினர். HEAVY DOSE கொடுத்து ஆபரேசன் செய்ததை, குழந்தை சுயநினைவை இழந்த பின்னரே, ரங்கா மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாகவும், முன்னரே தெரிவித்திருந்தால் HEAVY DOSE செலுத்த அனுமதித்திருக்க மாட்டோம் எனவும் தாய் ஜெயஸ்ரீ கண்ணீருடன் கூறினார்.குழந்தை இறந்ததை ரங்கா மருத்துவமனை மருத்துவர்கள் மறைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசி குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதை போன்று செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும் சாருமதியின் பாட்டி புலம்பினார்.குழந்தை இறந்த விவகாரத்தை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மறைத்து, சிகிச்சை செய்வதை போன்று நாடகம் ஆடியதாகவும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குழந்தை இறந்தவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்ததாக தந்தை வேதனையுடன் கூறினார். குழந்தை இறப்பிற்கு ரங்கா மருத்துவமனை மருத்துவர்களும் அவர்களுக்கு உடந்தை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் என தந்தை லோகநாதன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.நன்றாக ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தங்களை விட்டு பிரிந்து விட்டதாக பெற்றோர் வேதனையுடன் கூறுகின்றனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது முறையாக எந்த பதிலையும் அளிக்கவில்லை..