தருமபுரி அருகே 9ஆம் வகுப்பு பள்ளி மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்த சமூக அறிவியல் ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். 10 பேர் கொண்ட கட்டப்பஞ்சாயத்து குழுவினர் செய்த அநியாயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உள்ளூர் அரசியல் பிரமுகர்களும், ஊர் முக்கியஸ்தர்களும் நீதி கேட்பதாக கூறி, ஆசிரியரை மிரட்டி, பணம் வாங்கி வாயில் போட்டு ஏப்பம்விட்ட விவகாரம் வெளியில் கசிந்துள்ள நிலையில், சம்பவம் நடந்து 20 நாட்களாக அமைதியாக இருந்துவிட்டு கடைசியில், தன் தலை உருளுமே என்ற பயத்தில் ஓடிவந்து புகார் அளித்த தலைமை ஆசிரியையை பலரும் திட்டி வருகின்றனர்.பேத்தி வயது சிறுமியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, தான் சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர் என, தன் தரத்தையே குறைத்துக் கொண்டார் இந்த சமூக அறிவியல் ஆசிரியர். அதே சிறுமிக்கு நீதி கேட்கிறேன் என்ற பெயரில் நிதி வாங்கி அதனை மூடி மறைத்துள்ளனர் ஊரில் பெரியவர்கள் என சொல்லிக்கொண்டு சுற்றும், முறுக்கு மீசைக்கார பெருச்சாளிகளும், அரசியல் கரைவேட்டி அயோக்கியவான்களும். அப்படியானால், சிறுமியிடம் அத்துமீறிய ஆசிரியருக்கும், காந்திநோட்டுக்கு கணக்குபோட்டு கட்டப்பஞ்சாய்த்து செய்த மீசைக்கார பெருச்சாளிகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதே பலரது ஆவேச கேள்வி. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயின்று வரும் 9ஆம் வகுப்பு மாணவிகள் கடந்த 27 ஆம் தேதி PT பீரியட் நேரத்தில் விளையாடுவதற்காக மைதானத்திற்கு சென்றுள்ளனர். பள்ளியில் இருந்து சிறிது தூரம் நடந்து செல்லும் தொலைவில் மைதானம் உள்ள நிலையில், ஒரு மாணவி மட்டும் பந்தை எடுப்பதற்காக ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறைக்கு வந்துள்ளார்.சமூக அறிவியில் ஆசிரியர் மணிவண்ணனை தவிர மற்ற ஆசிரியர்கள் அந்த அறையில் இல்லாத நிலையில், வழக்கமாக பந்து வைக்கப்பட்டிருக்கும் பீரோவின் சாவியை அவரிடம் கேட்டார் மாணவி.சாவியை எடுத்து தருவதாககூறி, மாணவியின் அருகில் வந்த ஆசிரியர் மணிவண்ணன், அறையின் கதவை சாத்திவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.மாலைவேளை என்பதால் மாணவிகள் அனைவருமே விளையாட்டு மைதானத்தில் நின்றதால் மாணவியின் அழுகுரல் யாருக்குமே கேட்கவில்லை. நடந்த விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என, மணிவண்ணன் மிரட்டியதால் அழுதபடியே பள்ளியில் இருந்து கிளம்பிய மாணவி, வீட்டிற்கு சென்று தனது தாயிடம் நடந்த விவரத்தை கூறி உள்ளார்.தந்தையை இழந்த மாணவி, தாயிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறியபோது, பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதுபோல தாயும் கீழே விழுந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் மாணவியின் சித்தப்பாவிற்கு தகவல் கொடுத்து, நியாயம் கேட்குமாறு கூறி உள்ளார் மாணவியின் தாய். இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவியின் சித்தப்பா, ஆசிரியர் மணிவண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை ஆசிரியை சாந்திமணியிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட சாந்திமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து, மணிவண்ணனின் மானத்தை வாங்குவார்கள் என பார்த்தால் பள்ளி மானம் போய்விடக் கூடாது என்பதற்காக, ஊர் முக்கியஸ்தர்களிடமும், ஊரில் உள்ள அரசியல் பிரமுகர்களிடமும் இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளனர். இதில் ஒரு வழக்கறிஞரும் அடக்கம்.ஆசிரியர் மணிவண்ணன் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என பேசி முடித்த 10 பேர் கொண்ட கட்டப்பஞ்சாயத்து குழு, முதற்கட்டமாக 6 லட்சத்தை கறந்துள்ளனர். திரைப்பட துணை நடிகர் வீட்டில் வைத்து தான் கட்டப்பஞ்சாயத்து நடந்ததாக கூறப்படும் நிலையில், மணிவண்ணனிடம் இருந்து வாங்கிய பணத்தில் 2 லட்சத்தை மாணவியின் குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை 6 பேர் சரிசமமாக பிரித்து கொண்டதாக தெரிகிறது.பணம் வாங்காத மற்ற 4 பேர், கட்டப்பஞ்சாயத்து டீலில் தங்களை மட்டும் டீலில் விட்டால் எப்படி என வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. ஆனாலும், அந்த 4 பேருக்கும் பணம் கிடைக்கவில்லை.இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், கட்டப்பஞ்சாயத்து பேசி பணம் பெற்ற விவகாரத்தை வெளியில் கூறி உள்ளனர். அப்போதுதான், மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியே வெளியில் தெரிந்தது.கட்டப்பஞ்சாயத்து விவகாரம் வெளியில் கசிந்ததும் உஷாரான தலைமை ஆசிரியர் சாந்தி மணி, தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஓடிப்போய் மணிவண்ணன் மீது புகார் அளித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒகேனக்கல் சென்றபோது மதுபோதையில் வாகனத்தால் போலீசாரின் மீது இடித்து வம்பை விலைக்கு வாங்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மணிவண்ணன், தற்போது 2ஆவது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இதுஒருபுறம் இருந்தாலும், சம்பவம் நடந்து 20 நாட்களாக அமைதியாக இருந்துவிட்டு விஷயம் வெளியில் கசிந்ததும், தன் தலை உருளுமே என்ற ஒரே காரணத்திற்காக ஓடிவந்து புகார் அளித்த தலைமை ஆசிரியையை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஏ ஒன் குற்றவாளி தலைமை ஆசிரியையை தான் என்றும் பாலியல் வன்கொடுமை நடந்தபோதே ஊர் முக்கிய பெருச்சாளிகளிடம் விவகாரத்தை கொண்டு போகாமல், காவல்துறையின் காதுகளுக்கு கொண்டு போயிருந்தால் சிறுமியை வைத்து இவர்கள் அனைவரும் தரங்கெட்ட சீட்டாட்டம் ஆடி இருப்பார்களா என கொந்தளிக்கும் மக்கள், மாவட்ட கல்வி அலுவலர், சிறுமியின் சித்தப்பா, கட்டப்பஞ்சாயத்துக்கு தன் வீட்டில் இடம் கொடுத்ததாக கூறப்படும் துணை நடிகர், அரசியல் கட்சியினர், வழக்கறிஞர் என 10 பேர் கொண்ட கட்டப்பஞ்சாயத்து குழுவிற்கும் பாடம் கற்பிக்க வேண்டும் எனக் கொந்தளித்துள்ளனர்.