திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையில் அரசுப்பள்ளி ஊழியர் பாம்பு கடித்து உயிரிழந்த வழக்கில், இரண்டு மாதங்கள் கழித்து திடீர் திருப்பமாக அவரது மகன்களே கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற தந்தை என்றும் பாராமல் நிகழ்த்தப்பட்ட கொலை சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குளம் தெருவைச் சேர்ந்தவர் 56 வயதான கணேசன். உள்ளூரில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்த இவருக்கு மோகன்ராஜ், ஹரிஹரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் இரண்டு மகன்களையும் படிக்கவைத்து வளர்த்து ஆளாக்கிய கணேசன், இருவருக்கும் திருமணமும் செய்துவைத்து கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக, சாலைவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த கணேசன், நடக்க முடியாத நிலையில் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தான், கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்து விட்டதாக கூறி, அமளி துமளி செய்த இரு மகன்களும் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணேசன் இறந்துவிட்டதை உறுதிசெய்யவே, அவருக்கு இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.இறந்து போன கணேசன், 3 கோடி ரூபாய் அளவுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தது தெரிய வரவே சம்மந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்துள்ளனர். அதுவும் குறிப்பிட்ட சில மாதங்களுக்கு முன் புதிது புதிதாக இன்சூரன்ஸ் போடப்பட்டிருப்பதையும் ஆராய்ந்த காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், கணேசனின் மரணத்தில் சந்தேகமடைந்து, ஐஜி அஸ்ராகார்க்கிடம் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. இன்சூரன்ஸ் நிறுவன புகாரை ரகசியம் காத்த காவல்துறையினர், சத்தமில்லாமல் கணேசனின் குடும்பத்தாரின் செயல்பாடுகளை நோட்டமிட்டு வந்ததாக தெரிகிறது.கணேசன் இறப்பதற்கு ஓரிரு நாட்கள் முன்பும், கணேசன் மறைவுக்கு அடுத்த நாளும் மோகன்ராஜ் மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் வங்கிக்கணக்குகளில் இருந்த லட்சக்கணக்கில் பணம் டிரான்ஃபர் செய்யப்பட்டது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, கணேசனின் மரணம் இயற்கையானது அல்ல என்பதையும் உறுதி செய்தனர். இதையடுத்து, கணேசனின் மகன்கள் இருவரையும் அழைத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது தான், பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின. தந்தையின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மோகன்ராஜுக்கும் ஹரிஹரனுக்கும் கடந்த சில நாட்களாகவே கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் என்ன செய்வதென்று விழிபிதுங்கி நின்ற இருவரும் சேர்ந்து, அப்பாவின் இன்சூரன்ஸ் பணத்தை அடைவதற்காக அவரையே போட்டுத்தள்ள துணிந்தனர். அப்பாவை கொன்றுவிட்டால் பணத்திற்கு பணமும் கூடவே ஒரு அரசுவேலையும் கிடைக்கும் என்ற பேராசையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அவரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்ததும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சாலை விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய கணேசன், படுத்த படுக்கையானதும் இன்னும் டென்சனான மகன்கள் இருவரும், ஏற்கனவே ஒருமுறை நாகப்பாம்பை வைத்து கொலை முயற்சி செய்திருப்பதும் அதிரவைக்கிறது. மூத்த மகன் மோகன்ராஜ் அவரது நண்பர் பிரசாந்த் மூலம் மணவூரை சேர்ந்த இருளர் இனத்தை சேர்ந்த தினகரனை வைத்து பாம்பு பிடித்து வரச்சொல்லியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதன்படி, மணவூரில் இருந்து நல்ல பாம்பை பார்சல் கட்டி காரில் கொண்டுவந்த கொடூரன்கள், கணேசனின் காலடியில் விட்டு கடிக்க வைத்துள்ளனர். ஆனால், அதில் நல்வாய்ப்பாக கணேசன் உயிர்பிழைத்ததாக தெரிகிறது. இதனால், விரக்தியடைந்த மகன்கள் இம்முறை கடும் விஷம் கொண்ட கட்டுவிரியனை கொண்டு கொலை செய்ததாக தெரிகிறது. முதலில் தந்தையின் கழுத்தில் பாம்பை விட்ட கொலைகாரர்கள், பாம்பு மூன்று முறை கொத்தியதை பார்த்துவிட்டு பின்னர் உள்ளே சென்று பாம்பை அடித்து சாகடித்துள்ளனர். பின்னர் வீட்டில் உள்ளவர்களை எழுப்பி நாடகமாடிய இருவரும் கணேசன் இறந்ததை உறுதி செய்த பிறகே, மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது. தந்தையை சாகடிக்க பாம்பு கொண்டு வந்த நபருக்கும் அவரது கூட்டாளிக்கும் சேர்த்து ஒன்றரை லட்சம் ரூபாய் கூலி பேசிய இருமகன்களும் தந்தை இறந்ததை அறிந்த மறுகணமே சந்தோசத்தில் பணத்தை ஜிபே மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.ஈவு இரக்கமே இல்லாமல் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக கணேசனின் இருமகன்களுடன், கொலைக்கு உடந்தையாக இருந்த பாலாஜி, நவீன் குமார், தினகரன், பிரசாந்த் என மொத்தம் ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பொதட்டூர்பேட்டை போலீசாரின் அதிரடி புலன்விசாரணைக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நேரில் வந்து பாராட்டு தெரிவித்துள்ளார். இன்சூரன்ஸ் பணத்திற்காகவும் அரசு வேலைக்காவும் பெற்ற தந்தையை மகன்களே கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.