சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தொடர்ந்து 7ஆவது நாளாக புத்தாண்டு தினத்தன்றும் நூற்றுக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களை குண்டுகட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றியபோது, ஆசிரியர் ஒருவரின் கையை போலீசார் உடைத்து விட்டதாக புகார் தெரிவித்து, சக ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து 7ஆவது நாளாக புத்தாண்டு தினத்தன்றும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சென்னை எழும்பூர் காந்தி- இர்வின் மேம்பாலம் சாலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆசிரியர்களின் போராட்டம் தவறு என அரசு நினைத்தால், தங்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை பேருந்தில் ஏற்றியபோது, ஆசிரியர் ஒருவரின் கையை போலீசார் உடைத்து விட்டதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரும்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், கை உடைந்த ஆசிரியர் வலியால் துடிதுடித்ததை கண்டு சக ஆசிரியர்கள் வெகுண்டு எழுந்தனர்.கை வலியால் துடித்த புதுக்கோட்டையை சேர்ந்த அந்த ஆசிரியர், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார்.ஆசிரியரின் கையை உடைத்ததாக காவல்துறையை கண்டித்து, சமுதாய நலக்கூடம் முன்பு ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.நியாயமான முறையில் போராடும் தங்களை தீவிரவாதிபோல நடத்துவதாகவும், போலீசார் மூலம் அடக்குமுறையை ஏவி விடுவதாகவும், தமிழக அரசு மீது ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக, சமுதாய நலக்கூடத்தின் கதவை பூட்டி விட்டதாகவும், மின்சாரத்தை துண்டித்து விட்டதாகவும், அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.