தேனி அருகே, பட்டப்பகலில் வீட்டு வாசலிலேயே வக்கீல் மனைவியையும், மைத்துனரையும் துடி துடிக்க வெட்டிப் படுகொலை செய்த திடுக் சம்பவம் அரங்கேறியது. திருமணமாகி 3 மாதத்திலேயே தினமும் சித்ரவதை செய்து நரக வேதனையை கொடுத்த கணவனின் கொலை பசிக்கு 2 உயிர்கள் இரையானது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அடுத்த முத்தையன்செட்டிப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவர், அமமுகவில் இருந்து வரும் நிலையில், அவருடைய 2வது மகன் பிரதீப்பும் அமமுகவில் ஒன்றிய பொறுப்பில் இருந்து வந்தார். வக்கீலுக்கு படித்திருக்கும் பிரதீப்புக்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சின்னமனூரை சேர்ந்த வழக்கறிஞர் நிகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நிகிலாவின் தந்தையும் திமுக பிரமுகர் என்பதால், ஊர் மெச்சும் சீர் வரிசையுடன் திருமணம் செய்து வைத்த நிலையில், திருமணம் ஆன 2வது நாளிலேயே பிரதீப்பின் கொடூர முகம் வெளிப்பட தொடங்கியிருக்கிறது. குடிக்கு அடிமையாகி இருந்த பிரதீப், தினமும் மனைவி நிகிலாவை டார்ச்சர் செய்ய தொடங்கியதாக சொல்லப்படுகிறது. அதோடு, ஜூனியர் அஸிஸ்டெண்ட்டாக இருந்து வரும் நிகிலாவின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு மிருகத்தனமாக நடந்து கொள்ள தொடங்கியதாக கூறப்படுகிறது. கணவனின் டார்ச்சர் தாங்க முடியாமல் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு, பிறந்த வீட்டுக்குச் சென்ற நிகிலாவை 10நாளுக்கு முன்பு தான் பஞ்சாயத்து பேசி கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.ஆனாலும் கூட பிரதீப்பின் புத்தி மாறியதாக தெரியவில்லை. மீண்டும் அதே மாதிரி சந்தேக பித்து பிடித்து தொந்தரவு செய்ய தொடங்கியிருக்கிறான். பிரதீப்பின் செயல் பிடிக்காமல் நிகிலாவும் எதிர்த்து பேச ஒரு வாரம் முன்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி கைகலப்பு நிகழ்ந்திருக்கிறது.நிகிலாவை அடித்து துன்புறுத்தவே, அப்போதே சின்னமனூர் போலீசில் நிகிலா வரதட்சனை புகார் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.போலீஸ் விசாரிக்கும் போது, கணவன் பிரதீப்புடன் மீண்டும் வாழ விருப்பம் இல்லை என்ற நிகிலா, தனது அண்ணன் விவேக் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு சீர் வரிசையாக கொண்டுவந்த பொருட்களை எடுக்க கணவன் பிரதீப் வீட்டுக்கு சென்றிருக்கிறார். பிரிந்து சென்று விடலாம் என நினைத்து தான் தனது உடமைகளை எடுத்து செல்ல நிகிலா வந்திருக்கிறார்.ஆனாலும், பிரதீப் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளவே, இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது. குடும்ப சண்டை வீதிக்கு வந்து களேபரமாகிக் கொண்டிருக்க, பேசிக் கொண்டிருக்கும் போதே கத்தியை எடுத்த கணவன் பிரதீப், நிகிலாவின் அண்ணன் விவேக்கை குத்தியதாக சொல்கிறார்கள்.அண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்ததை பார்த்த தங்கை நிகிலா, கத்தியை பறித்து தடுக்க முயற்சிக்கவே அருகில் இருந்த அரிவாளை எடுத்த பிரதீப், தாலி கட்டிய மனைவியை சரமாரியாக வெட்டியிருக்கிறான்.பிரதீப்பின் கொலை பசிக்கு மனைவி நிகிலாவும், மைத்துனர் விவேக்கும் சம்பவ இடத்திலேயே பலி ஆகினர்.இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அண்ணன், தங்கை இருவரது சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள்ளாக பிரதீப் குடும்பத்தோடு தலைமறைவான நிலையில், 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். வழக்கறிஞருக்கு படித்த பிரதீப் மீது ஏற்கனவே அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்ய கூட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.சில மாதங்களுக்கு முன்பு கூட குடும்ப தகராறுக்காக சொந்த சகோதரி வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்ற நிலையில், தற்போது இரட்டை கொலை வழக்கிலும் சிக்கி தலைமறைவாகியுள்ளான்.