நெல்லை மாவட்டம், கூடன்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடிய கார், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.கூடன்குளத்தை சேர்ந்த தனசீலன் என்பவர், அதிவேகமாக ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடியதோடு, எதிரே வந்த லாரி மீது மோதி, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில், பள்ளிச் சீருடை அணிந்த 2 மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடன்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநரான, 33 வயதான தனசீலன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.