விருத்தாசலத்தில் இடி விழுந்து தென்னை மரம் பற்றி எரியும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பிற்பகல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, இந்த பகுதியில் இடி மின்னல் மட்டுமே காணப்பட்டது. பெரியார் நகர் பகுதியில் இடி இடிக்க தொடங்கி, சுமார் நான்கு மணி அளவில் அதிக சப்தத்துடன் மணிமேகலை வீதியில் வசித்து வரும் சண்முகம் என்பவர் வீட்டின் தென்னை மரத்தில் இடி விழுந்து பற்றி எரியத்தொடங்கியது. இந்நிலையில், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் தென்னை மரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். நல்வாய்ப்பாக இடி விழுந்த இடத்தில் எந்தவித உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை.