செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் ஊராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாண்டூர் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பாண்டூர் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டூர் மக்கள் பேருந்தை சிறை பிடிக்க முயன்றதை தொடர்ந்து 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.