சேலத்தில், அதிமுக மாஜி எம்.பி. அர்ஜூனன் ஒரு மூதாட்டியின் கன்னத்தில் பளார் அறைவிட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. கொரோனா காலத்தில் காவலரை தகாத வார்த்தைகளில் திட்டி, எட்டி உதைத்து எல்லை மீறிய அர்ஜூனன் தற்போது ஒரு மூதாட்டியை அடித்துள்ளது பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் 1980 முதல் 1984 ஆம் ஆண்டு வரை தருமபுரி நாடாளுமன்ற தொகுதி எம்பியாகவும், 1989ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை தாரமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எதற்கெடுத்தாலும் சுள்ளென்று கோபப்படும் இவர், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின்போது தனது தோட்டத்தில் இருந்து ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரின் காரை தடுத்து நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். இ-பாஸ் இருந்தால்தான் வாகனங்கள் செல்ல முடியும் என்பதால் காவலர்கள் அதனை கேட்க, யாரிடம் சோதனை செய்கிறாய்? நான் யார் தெரியுமா? என கொந்தளித்த அர்ஜூனன் காவலரை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு எட்டி உதைப்பதற்காக துள்ளினார். அதனை எதிர்பார்க்காத காவலர்கள் சிலர் அவரை அமைதிப்படுத்தி காரில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிமுக தலைமையின் காதுக்கும் விஷயம் சென்றது. அதன்பிறகு கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார் அர்ஜூன்.உள்ளூர் மக்களே அவரிடம் அவ்வளவு எளிதில் பேசிவிட முடியாது என்றும் படக்கென கை ஓங்குவது தான் அவரது பழக்கம் எனவும் ஓமலூர் மக்களே முணுமுணுத்தது உண்டு.இந்நிலையில், தற்போது கணவனை இழந்த ஒரு மூதாட்டியின் கன்னத்தில் பளார் அறைவிட்டு மீண்டும் மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ளார் அர்ஜூனன். காமனேரி மற்றும் சின்ன திருப்பதி இடையே சாலை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதற்காக, அங்குள்ள பல இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.அந்தவகையில், அர்ஜூனனுக்கு சொந்தமான இடத்தையும் விரிவாக்கம் செய்துள்ளனர். அப்போது, தனது இடத்தில் கை வைக்க வேண்டாம், எதிரில் உள்ள குடியிருப்புவாசிகளின் இடத்தில் கை வையுங்கள் என சாலை விரிவாக்கம் செய்யும் பணியாளர்களிடம் அர்ஜூனன் கூறியதாக தெரிகிறது.அதனால், எதிரில் உள்ள குடியிருப்புகளின் அருகே விரிவாக்கப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர் பணியாளர்கள். அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அர்ஜூனன் தான் பணிகளை செய்யுமாறு கூறியதாக பணியாளர்கள் கூறி உள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள், அர்ஜூனனிடம் நியாயம் கேட்டுள்ளனர். அந்த நியாயத்தை காது கொடுத்து கேட்காத அர்ஜூனன் வழக்கம்போல ஆவேசமாக பாய்ந்து வந்து சரோஜா என்ற 60 வயது மூதாட்டியின் கன்னத்தில் அறைந்தார்.எகிறி எகிறி அடித்த அர்ஜூனன் தட்டிக்கேட்க வந்த மக்களையும் அருகே கிடந்த கட்டைகம்பால் அடிக்க வந்தார். அப்போது, சிலர் அவரை தடுத்து நிறுத்தி காரில் அனுப்பி வைத்தனர்.அர்ஜூனின் வீடியோவை பார்க்கும் பலரும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.