கோவையில், தன்னைவிட்டு பிரிந்து சென்றதோடு மட்டுமல்லாமல், தனது அண்ணனுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து விட்டு அந்த போட்டோவை தனக்கே அனுப்பி வெறுப்பேற்றிய காதல் மனைவியை கணவன், மகளிர் விடுதிக்குள் புகுந்து வெட்டி சாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுங்க வைக்கும் காரியத்தை செய்துவிட்டு, மனைவியின் ரத்தம் காய்வதற்குள் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.திருநெல்வேலி மாவட்டம், தருவை பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் - ஸ்ரீபிரியா தம்பதி. 15 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. இதில் ஒரு ஆண்குழந்தைக்கு மன வளர்ச்சி குன்றியதால் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. குழந்தையை யார் பார்த்துக் கொள்வது என்பதில் உருவான விரிசல், நாளடைவில் பெரிதாகி அடிதடி வரை சென்றதாக சொல்லப்படுகிறது.கணவனின் டார்ச்சரை பொறுத்துக் கொள்ளாமல் குழந்தைகளை தனியே விட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறிய ஸ்ரீபிரியா, கோவையில் தனது தோழியின் உதவியால், பெண்கள் தங்கும் விடுதியில் சென்று சேர்ந்ததாக கூறப்படுகிறது. அங்கு தங்கியபடி, ப்யூட்டி பார்லர் ஒன்றில் பணிக்கு சேர்ந்த ஸ்ரீபிரியாவுக்கும் கணவரின் அண்ணன் முறையான இசக்கி ராஜா என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இசக்கிராஜாவும் அவ்வப்போது கோவைக்கு சென்று ஸ்ரீபிரியாவுடன் தனிமையில் நேரத்தை கழித்து வந்த நிலையில், இந்த தகவல் கணவர் பாலமுருகனின் காதுகளுக்கு எட்டியிருக்கிறது.இதில் உச்சம் என்னவென்றால், தன்னை கண்டுகொள்ளாத கணவனை வெறுப்பேத்துவதற்காக இசக்கிராஜாவுடன் தனிமையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறார் ஸ்ரீபிரியா. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பாலமுருகன், ஸ்ரீபிரியாவை நேரில் சந்தித்து பேசுவதற்காக கோவை வந்திருக்கிறார். அங்கு வந்து ஸ்ரீபிரியாவிடம் பேசிய பாலமுருகன், குழந்தைகளை தனி ஒரு ஆளாக பார்த்துக் கொள்ள முடியவில்லை, மீண்டும் என்னோடு வந்துவிடு என, கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ரீபிரியா இரவு நேரம் ஆகிவிட்டதால் விடுதிக்கே சென்றுவிட்டதாக தெரிகிறது.மறுநாள் ஸ்ரீபிரியாவிடம் சமாதானம் பேசுவதற்காக அவரது தாய்மாமனுடன் விடுதிக்கே சென்ற பாலமுருகன், வாசலிலேயே காதல் மனைவிக்காக காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது தான், காலை உணவை பெறுவதற்காக விடுதி வளாகத்திற்கு வந்திருந்தார் ஸ்ரீபிரியா. அவரை கண்டதும் கூச்சலிட்ட பாலமுருகன், அத்துமீறி விடுதிக்குள் நுழைந்து தகராறு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை தூக்கிய பாலமுருகன், கண் இமைக்கும் நேரத்திற்குள் ஸ்ரீபிரியாவின் முடியை பிடித்து இழுத்து கழுத்தில் வெட்டிசரித்துள்ளார்.விடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஆளுக்கொரு மூலையில் சிதறி ஓட்டம் பிடித்த நிலையில், பாலமுருகன், ஸ்ரீபிரியா துடிதுடித்து உயிரிழப்பதை சேர் போட்டு அமர்ந்து ரசித்திருக்கிறார். அப்போதும் ஆத்திரம் தீராத பாலமுருகன், மனைவி ஸ்ரீபிரியாவின் சடலத்திற்கு முன் கால் மேல் கால் போட்டு ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டு, துரோகத்தின் சம்பளம் மரணம் என அங்கேயே வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்திருக்கிறார்.விடுதி நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி, கொலையாளி பாலமுருகனை கைது செய்து அழைத்து சென்றனர். பட்டப்பகலில் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து நிகழ்த்தப்பட்ட கொலை, விடுதிவாசிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.