சென்னை அடுத்த அம்பத்தூரில் பெண் எஸ்.ஐ. தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது 2ஆவது கணவரான எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தம்மை பார்க்க வரவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என பெண் எஸ்.ஐ. மிரட்டியதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், ஆண் எஸ்.ஐ. மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோனி மாதாவிற்கு யோவான் என்பவருடன் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சென்னை பாரிமுனையில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு சப் -இன்ஸ்பெக்டராக அந்தோனி மாதா பணிக்கு சேர்ந்தார். காவல் உதவி ஆய்வாளர் பயிற்சி காலத்தில் சக உதவி ஆய்வாளர் ரஞ்சித் என்பவருடன் அந்தோனி மாதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. பயிற்சிக்கு பின்னர் இருவரும் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனிடையே, கள்ளக் காதல் விவகாரம் அந்தோனி மாதாவின் கணவர் யோவானுக்கு தெரியவர, யோவான்-அந்தோனி மாதா தம்பதி விவாகரத்து செய்து பிரிந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சக உதவி ஆய்வாளர் ரஞ்சித்தை திருமணம் செய்த அந்தோனி மாதா, அயப்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்த காலத்தில், ரஞ்சித்தின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.அயப்பாக்கம் வீட்டில் போதிய அளவு வசதி இல்லாததால், ரஞ்சித் மற்றும் அந்தோணி மாதா ஆகியோர் அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இரண்டு மகன்களுடன் வசித்து வந்தனர். இதனிடையே ரஞ்சித்-அந்தோணி மாதா இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக, ஒரு வாரமாக ரஞ்சித் வீட்டிற்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ஆம் தேதி ரஞ்சித்துக்கு போன் செய்த அந்தோனி மாதா, வீட்டிற்கு வராதது குறித்து கேட்டபோது, வீட்டிற்கு தற்போது வர முடியாது எனக் கூறி ரஞ்சித் அழைப்பை துண்டித்ததாக தெரிகிறது.இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தோனி மாதா, ரஞ்சித்துக்கு வீடியோ கால் செய்து வீட்டிற்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறிக் கொண்டே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனே பதறிப்போன ரஞ்சித், அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் உடனடியாக சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, அந்தோணி மாதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அந்தோனி மாதா தற்கொலை குறித்து கேள்விப்பட்டதும் துடிதுடித்துப்போன அவரது தாயார் செல்வி, மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனிடையே தமது மகளை கொன்று விட்டாயே என ஆவேசமடைந்த தந்தை அருள் ராஜிடம், அந்தோனி மாதா தற்கொலைக்கு தாம் பொறுப்பேற்பதாக ரஞ்சித் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.இந்த சூழலில், தற்கொலைக்கு தூண்டியதாக உதவி ஆய்வாளர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து ரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவு பிறப்பித்தார்.