சென்னை மாநகராட்சியில், இரு மண்டல தூய்மை பணிகளை தனியார் மயமாக்குதலை கண்டித்து, மெரினா கடற்கரை கலைஞர் நினைவிடம் அருகே, தலைமைச் செயலகம் முன்பாக, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்த நிலையில் இரவில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து 5 மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தூய்மை பணிகளை தனியார்மயமாக்குதல் விவகாரம் சூடுபிடித்துள்ளது. சென்னையின் மண்டலம் 5 மற்றும் 6ல், தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் நீறு பூத்த நெருப்பை போல் பற்றி எரிந்து கொண்டு தான் இருக்கிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையிலும், அரசும் செவி சாய்க்காமல் மெளனம் காத்து வருகிறது. தூய்மை பணியை தனியாரிடம் தாரை வார்த்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியம் 23 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, 16 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படும் என்றும், வேலைக்கு உத்தரவாதம் இல்லையெனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பணியாளர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை மாநகராட்சியின் முன்பு 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடியதையும் அவர்கள் நள்ளிரவில் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டதையும் எளிதில் கடந்துவிட முடியாது. பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மை பணியாளர்கள், சென்னை, மெரினா கடற்கரை கலைஞர் நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை முன்கூட்டியே அறிந்திருந்த நிலையில் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். சாலையில் அமர்ந்து தனியார்மயமாக்குதலை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய நிலையில், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். சாலையில் அமர்ந்து கொண்டு விடாப்புடியாக வரமறுத்த தூய்மை பணியாளர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்றதால் அப்பகுதியே பெரும் பரபரப்பாகியது.கைகளில் கீறல்களையும், கம்பால் அடித்த காயங்களையும் காட்டி தூய்மை பணியாளர்கள் கண்ணீர் வடித்தது பார்ப்பவரை கலங்க செய்தது. 5 மாதங்களாக வேலையில்லாமல் தவித்து வருவதாக குமுறிய தூய்மை பணியாளர்கள், போலீசார் தங்களிடம் அராஜக போக்கில் நடந்து கொள்வதாகவும் கதறினர்.பட்டினியும் பசியுமாக, வேலையில்லாமல் தவிக்கும் தாங்கள் கேள்வி கேட்டால், கைதை மட்டுமே பதிலாக கொடுப்பதாக தூய்மை பணியாளர்கள் வேதனையை கொட்டினர். தற்போது வரை தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர்கள், தங்கள் வேலையை மட்டும் தானே கேட்கிறோம் என ஆதங்கப்பட்டனர்.மெரினாவை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகம் முன்பும் தூய்மை பணியாளர்கள் சாலை மறியலில் இறங்கிய நிலையில் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று பேருந்துக்குள் அடைத்தனர். அப்போது சாலையில் படுத்துக்கொண்டு வர மறுத்த தூய்மை பணியாளர்களை தரதரவென போலீசார் இழுத்து சென்றனர். அரசு பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். உரிமைக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை குண்டுக்கட்டாக கைது செய்தது தூய்மை பணியாளர்களை கொதிப்படைய செய்துள்ளது.