சென்னையில், தம்பதிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் மனைவியின் தலையில் சுத்தியலால் கொடூரமாக தாக்கிய கணவரை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயமடைந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.சென்னை அடுத்த போரூர் சுங்கச்சாவடி பகுதியில் திடீரென பரபரப்பு. ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதில், அந்த ஆண் கையில் வைத்திருந்த சுத்தியலால் பெண்ணின் தலையில் மடேர் மடேர் என 7 முறை ஆவேசமாக அடித்தார். இதைக்கண்ட பொதுமக்கள் வெலவெலத்து போனார்கள். இத்தாக்குதலில் நிலைகுலைந்த அந்த பெண் அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.அப்போது, துணிச்சலான சிலர் அந்த ஆணை பிடித்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். இதன்பிறகு, மேலும் சிலரும் சேர்ந்து கொள்ள அந்த ஆணுக்கு தர்ம அடி கொடுத்து நையப்புடைத்தனர். இதில் நிலைகுலைந்த அந்த ஆணும் மயங்கி சரிந்து விழுந்தார். இதனிடையே, தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், பலத்த காயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்றுவரும் அந்த ஆணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான், இருவரும் கணவன், மனைவி என்கிற விஷயம் போலீஸாருக்கு தெரிய வந்தது.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராஜா - சுலோச்சனா தம்பதிக்கு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சொந்த ஊரிலேயே வசித்து வருகின்றனர். ராஜாவும், சுலோச்சனாவும் மட்டும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து முகலிவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கொத்தனார் மற்றும் சித்தாள் வேலை செய்து வந்தனர்.தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கூச்சலும் குழப்பமுமாக இருந்தததால், வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறியுள்ளார். இதனால், கடந்த ஒரு வாரமாக ராஜா மட்டும் வீட்டுக்கு செல்லாமல் தனியாக வேறு இடத்தில் தங்கி வந்துள்ளார். இந்த சூழலில், இத்தம்பதியின் மகள் வழி பேத்திக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதற்காக, சுலோச்சனா புதிய துணிமணி மற்றும் நகை வாங்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.இவற்றை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக சுலோச்சனா போரூர் சுங்கச்சாவடிக்கு வந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து ராஜாவும் வந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், பின்னர் கையில் வைத்திருந்த சுத்தியால் மனைவி சுலோச்சனாவை ராஜா தாக்கியதும் தெரியவந்தது.பட்டப்பகலில், நட்டநடு ரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் மனைவியை சுத்தியலால் கொடூரமாக கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதையும் பாருங்கள் - பகலில் நோட்டம், இரவில் ஆட்டம், 7 மாவட்ட போலீசாருக்கு டிமிக்கி, காரில் சிக்கிய திருட்டு நண்பர்கள்