மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மீண்டும் வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடமே ஒப்படைத்தது. அப்போது, மீண்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். மலை உச்சியில் தீபமேற்ற நீதிபதி உத்தரவிட்ட இடத்திற்கு அருகே சிக்கந்தர் தர்கா இருக்கும் நிலையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினரும், பாஜகவினரும் திருப்பரங்குன்றத்தில் கூடியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனையடுத்து, 144 தடை உத்தரவு போடப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதனை தொடர்ந்து, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக நீதிபதிகள் ராம கிருஷ்ணன், ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.அப்போது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு துரதிருஷ்டவசமானது எனவும், 3ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில், மத ரீதியாக பதற்றம் உருவாக்க முயற்சி நடைபெற்றது எனவும் தமிழக அரசு வாதிட்டது. மேலும், உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் CISF வீரர்களை எப்படி தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்புக்கு நியமிக்க முடியும் என கேள்வி எழுப்பிய அரசு தரப்பு, போலீசாருக்கு மாற்றாக CISF இருக்க முடியாது எனவும் தெரிவித்தது. மேலும், திருப்பரங்குன்றத்தில் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டு, போலீசார் தாக்கப்பட்டனர் என்ற அரசு தரப்பு, பதற்றத்தை தணிக்க தான், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும் வாதிட்டது. தனி நீதிபதி உத்தரவு நீதி நடைமுறையை மீறியதாக இருப்பதால், அதனை அனுமதிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தமிழக அரசு தெரிவித்தது.இதனையடுத்து சிக்கந்தர் தர்கா தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. தீபத்தூண் என்றழைக்கப்படும் இடத்தில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டது கிடையாது எனவும், 100 வருடங்களாக இல்லாத வழக்கத்தை CISF மூலம் நிறைவேற்றுவதால் மத உணர்வு காயப்படாதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் போலீஸ் பாதுகாப்பு அளிக்காததால் தான் CISF பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டது எனவும், ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே தீபத்தூணில் தீபமேற்றும் நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது எனவும் வாதிடப்பட்டது. இதனையடுத்து, ஆண்டுக்கு ஒரு முறை தீபம் ஏற்றுவதால் எப்படி மத உணர்வு பாதிக்கப்படுகிறது என தர்ஹா தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு தரப்பினரின் சடங்கை இன்னொரு தரப்பு செய்யக்கூடாது என சொல்வதால், மத நல்லிணக்கம் உருவாகாது எனவும் அறிவுரை வழங்கினர்.மேலும், 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நடைமுறை தற்போது இல்லை எனவும், தற்போது இருக்கும் நடைமுறை 100 ஆண்டுகளுக்கு பிறகு இருக்குமா? என்பதை கூற முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர். அதோடு, தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டு இருக்கும் இடம் தீபத்தூண் கிடையாது எனவும், அது எல்லைக்கல் எனவும் சிக்கந்தர் தர்ஹா தரப்பில் வாதிடப்பட்டது.அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. மறைமுக உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தண்டனையில் இருந்து தப்பிக்க வழக்கை தாக்கல் செய்திருப்பது தெரிய வருகிறது எனவும் கூறினர். அதோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார் எனவும் இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.இரு நீதிபதிகள் கூறிய அடுத்த சில நிமிடங்களிலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணையை தொடங்கிய ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரைகாவல் ஆணையர் மற்றும் ஆட்சியர் அடுத்த 10 நிமிடங்களில் காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.இதனையடுத்து, இருவரும் ஆஜரான நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரம், பிறப்பிக்கப்பட்ட நோக்கம் குறித்து விளக்கம் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்போது உயர்நீதிமன்றநீதிபதியை விட தன்னை மேலானவர் என நினைத்துக் கொண்டிருப்பதாக மதுரை கமிஷ்னருக்கு கண்டனம் தெரிவித்தார்.அதோடு, வியாழக்கிழமைக்குள்ளாக உடனடியாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும் என உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் மலையில் காவல்துறை போட்டிருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 10 பேருடன் சென்று மலை உச்சியில் தீபம் ஏற்றவும், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டார்.