சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் மெக்கானிக்குகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் (18) மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தஷ்வந்த் (18). இவர்கள் இருவரும் கீழ்க்கட்டளை அம்பாள் நகர் பகுதியில் உள்ள டில்லி பாபு என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனப் பட்டறையில் மெக்கானிக்குகளாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு , இருவரும் தங்களது ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் இருசக்கர வாகனத்தில் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளனர். குரோம்பேட்டையில் இருந்து ஈச்சங்காடு வழியாக மடிப்பாக்கம் நோக்கி 'எம்-சாண்ட்' மணல் ஏற்றி வந்த கனரக லாரி இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் கோகுல் மற்றும் தஷ்வந்த் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் அதன் ஓட்டுநர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு இளம் தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : காரில் கடத்திய ரூ.8,37,800 கள்ள நோட்டுகள் பறிமுதல்