குமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலைய பகுதியில் ஆட்டோ டிரைவரால் கடத்தப்பட்ட 3 வயது சிறுமி, ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே காவல்துறை மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கிறது. இந்நிலையில், குழந்தையை யார் கடத்தியது? காரணம் என்ன என்பவற்றை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.மத்திய பிரதேச மாநிலம், போபாலை சேர்ந்தவர் ரஞ்சன். இவர் குமரி மாவட்டம், கோட்டார் சவேரியார் கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் பலூன் வியாபாரம் செய்வதற்காக குடும்பத்துடன் வந்திருக்கிறார். காலை முழுவதும் வியாபாரம் செய்துவிட்டு, மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து சொந்த ஊர் செல்வதற்காக, கோட்டார் ரயில் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். மூத்த மகளான மூன்று வயது குழந்தை சாரா, ரயில் நிலைய வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் குழந்தையை தூக்கி கொஞ்சியிருக்கிறார். அதோடு, உணவு வாங்கி தருவதாக கூறி, அந்த ஆட்டோ டிரைவர் அழைத்திருக்கிறார். ஆனால், ரஞ்சன் எவ்வளவு மறுத்தும் கூட குழந்தையையாவது அனுப்பி வையுங்கள், எனது ஆட்டோ இங்கே தான் நிற்கிறது என கூறி குழந்தையை அழைத்து சென்றுள்ளான். குழந்தையை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அரை மணி நேரத்தை கடந்த பின்னும் திரும்பி வரவில்லை என தெரிகிறது. இதனால் பதறிப் போன ரஞ்சனும் அவரது மனைவியும், அங்குமிங்குமாய் அலைந்து திரிந்து குழந்தையை தேடியிருக்கின்றனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆட்டோ ஓட்டுநர் தென்படவில்லை என கூறப்படுகிறது. அடுத்து என்ன செய்வது என்று கூட புரியாமல் இருவரும் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளனர். புகாரை பெற்ற மறுகணமே விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தையை ஆட்டோ டிரைவர் தூக்கி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து, அவனது புகைப்படத்தை கொண்டு போலீசார் அனைத்து ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் தேடினர்.இரவை எட்டிய நிலையில், குழந்தையை கடத்திய நபர் குறித்து போலீசுக்கு துப்பு கிடைத்தது. இதனடிப்படையில், பார்வதிபுரம் இறச்சகுளம் செல்லும் சாலையின் அருகே குழந்தையுடன் ஆட்டோ ஓட்டுநர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, குழந்தையை கடத்திய நபரை சுற்றி வளைத்தனர். முட்புதர்களும், தண்ணீரும் இருந்த பகுதியில் பதுங்கியிருந்த அவனை போலீசார் கைது செய்து, குழந்தையையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவன் கணேசபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான யோகேஷ் தள்ளாடும் மது போதையில் இருந்ததையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான அறிகுறி தென்படவில்லை என கூறியுள்ள குமரி மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின், கைது செய்யப்பட்ட நபர் மதுபோதையில் இருப்பதால் கடத்தலுக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். தொடர் விசாரணைக்கு பின்பே குழந்தை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக கடத்தப்பட்டதா அல்லது விற்பனை நோக்கத்துக்காக கடத்தப்பட்டதா என்பது தெரியவரும் என்றார்.குழந்தை கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுவிட்டதாக பெற்றோர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட யோகேஷ் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பரபரப்பாக இயங்கும் ரயில் நிலையப்பகுதியில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.