நெல்லை நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது, பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த போலீஸார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நெல்லை நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை மீண்டும் வந்த போது, இளைஞர் கொலையில் கொலையாளியை பிடித்த சிறப்பு எஸ்.ஐ.உய்கொண்டானுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தும், அவருக்கு சன்மானம் வழங்கவும் பரிந்துரை செய்தனர். நெல்லை நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு மற்ற காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியை விட தங்களது செல்போனில் தான் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.